ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின. 


போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா  அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு  செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன. 


இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி 5வது இடத்துக்கான போட்டி பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதையடுத்து நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் மலேசியா மற்றும் சௌத் கொரியா அணிகள் மோதின. அதில் மலேசிய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 




இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியின் முதல் சுற்றில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இந்திய அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் வீணடித்தது. இந்த போட்டி இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் 300வது சர்வதேச போட்டி என்பதால் போட்டிக்கு முன்னதாக அவர் கௌரவபடுத்தப்பட்டார். 




விறுவிறுப்பான இரண்டாவது சுற்று


இரண்டாவது சுற்றில் 19வது நிமிடத்தில் இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது. அதன் பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்ற, இந்திய அணி 2 கோல்களை அடித்து போட்டியில் முன்னிலை வகித்தது. இதையடுத்து இந்த சுற்றில் இந்திய அணி நேரத்தை விரையமாக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய அணியின் மந்தீப் சிங் கோல் அடிக்க, இந்திய அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தது. 




மூன்றாவது சுற்றில் இந்திய அணி துவக்கத்தில் நேரத்தை போக்கிக்கொண்டு இருந்தது. இதனால் ஜப்பான் அணி என்ன செய்வது என தெரியாமல் இருந்தது. இதற்கிடையில் சுமித் இந்திய அணியின் 4வது கோலை அடிக்க, போட்டியில் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. 


இறுதிச் சுற்றில் இந்திய அணி மிகவும் ஜாலியான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கையில், இந்திய அணி வேக மெடுத்தது. இதனால் இறுதிச் சுற்றில் தமிழ்நாடு வீரர் கார்த்தி இந்திய அணிக்கான 5வது கோலை அடித்தார். இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. ஜப்பான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 


இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்ளவுள்ளது. ஜப்பான் அணி மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சௌத் கொரியாவை எதிர்கொள்ளவுள்ளது.