இந்தோனிஷியோவில் இன்று ஆசிய ஹாக்கி கோப்பை தொடங்க உள்ளது. இந்தோனிஷியாவின் ஜகர்த்தாவில் தொடங்கும் இந்த ஆசிய ஹாக்கி கோப்பையில் ஏ பிரிவில் 4 அணிகளும், பி பிரிவில் 4 அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் பரம வைரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.


இந்திய அணி தனது முதல் போட்டியிலே பாகிஸ்தானை இன்று சந்திக்கிறது. இன்று மாலை ஜி.பி.கே. ஹாக்கி ஸ்டேடியத்தில் 5 மணியளவில் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி பிரேந்திர லக்ரா தலைமையில் களமிறங்க உள்ளது. எஸ்.வி. சுனில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.





இந்திய அணியின் கோல்கீப்பராக பங்கஜ்குமார் ராஜக் மற்றும் சுராஜ் கார்கேரா இடம்பிடித்துள்ளனர். டிபெண்டர்ஸ் ஆட்டக்காரர்களாக நிலம் சஞ்சீப், யஷ்தீப் சிவாஷ், அபிஷேக் லக்ரா, கேப்டன் பிரேந்திர லக்ரா, மன்ஜீத் மற்றும் திஸ்பன் டிர்கே ஆகியோர் களமிறங்க உள்ளனர்.


நடுவரிசையில் விஷ்ணுகாந்த் சிங், ராஜ்குமார் பால், மாரீஸ்வரன் சக்திவேல், சேஷே கவுடா, சிம்ரன்ஜித்சிங் ஆகியோர் களமிறங்க உள்ளனர். முன்களத்தில் பவன் ராஜ்பர், அபரன் சுதேவ், எஸ்.வி.சுனில், உத்தம்சிங், கார்த்தி களமிறங்குகின்றனர்.   


இந்திய அணியின் கேப்டன் பிரேந்திர லக்ரா மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவரது அனுபவம் அணிக்கு கைகொடுக்கும். மேலும், இந்திய அணி நடப்பு சாம்பியன் என்பதாலும் இந்திய அணி கூடுதல் தன்னம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர்கள் கார்த்தி மற்றும் சக்திவேல் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடுவரிசை வீரரான கார்த்தியும், முன்கள வீரரான கார்த்தியும் இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 




இந்தியாவைப் போலவே மூன்று முறை ஆசிய கோப்பையை கைப்பற்றிய பாகிஸ்தான் இந்த போட்டியில் பல அறிமுகங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்திய அணியிலும் யஷ்தீப்சிவாஷ், அபிஷேக் லக்ரா, மன்ஜீத், விஷ்ணுகாந்த், உத்தம்சிங் ஆகியோர் ஜூனியர் உலக கோப்பையில் அபாரமாக ஆடிய வீரர்கள்.


இவர்களைப் போல மாரீஸ்வரன் சக்திவேல், சேஷே கவுடா, பவன்ரஜ்பார், அபரன் சுதேவ் மற்றும் கார்த்தியும் அபாரமாக ஆடக்கூடியவர்கள். இளம் வீரர்களுக்கு இந்த தொடர் காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாவதற்கு நல்ல வாய்ப்பு என்பதால் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்தியா- பாகிஸ்தான் என இரு அணிகளிலும் இளமையும், அனுபவமும் ததும்பி உள்ளதால் இந்த போட்டி ஹாக்கி ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமைய உள்ளது. இந்தியா,பாகிஸ்தான் மட்டுமின்றி ஏ பிரிவில் ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.


பி பிரிவில் மலேசியா, தென்கொரியா, ஓமன் மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடுகின்றனர். இன்று பாகிஸ்தானுடன் ஆடும் இந்திய அணி நாளை ஜப்பானுடனும், நாளை மறுநாள் இந்தோனேஷியாவுடனும் மோத உள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண