ஸ்பெயினுக்கு அழைத்துச் செல்ல மறுத்த இரண்டு சகோதரிகளை அவரவர் கணவர்கள் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.


பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் குஜராத் மாவட்டத்தின் நாதியா கிராமத்தில் அரோஜ் அப்பாஸ் (24), அனீசா அப்பாஸ் (21) ஆகிய இரண்டு சகோதரிகள் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்பெயின் குடியுரிமை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு சகோதரிகளும் குடும்பத்திற்குள் கட்டாயத் திருமணம் செய்யப்பட்டனர். சகோதரிகள் ஒரு வருடத்திற்கு முன்பு மாமன் மகன்களை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தங்கள்  கணவர்களிடமிருந்து பிரிந்து செல்ல விரும்பியுள்ளனர். இதற்காக அவர்களிடம் விவாகரத்து கோரினர். மேலும், சகோதரிகள் ஸ்பெயினில் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதனையறிந்த, கணவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே நாடு திரும்ப வேண்டும் என்றும் தங்களது மனைவிகளிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி அவர்களும் நாடு திரும்பினர்.


பாகிஸ்தானுக்கு வந்த சகோதரிகளிடம்  கணவர்கள் ஸ்பெயினுக்கு குடிபெயர்வதற்கு ஏதுவாக ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்று கோரினர். இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டபோது, அவர்களை தாக்கி கழுத்தை நெறித்து சுட்டுக்கொன்றுள்ளனர். சகோதரிகளின் தாய் மகள்களைப் பாதுகாக்க முயன்றபோது, அவரை ஒரு தனி அறையில் அடைத்துள்ளனர்.




ஸ்பெயினில் இருந்து குஜராத்திற்கு வலுக்கட்டாயமாக சகோதரிகள் வரவழைக்கப் பட்டதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் கழுத்தை நெரித்து சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஷெஹ்ரியார் (சகோதரர்), முஹம்மது ஹனிஃப் (மாமா), காசித், அதிக், ஹசன் மற்றும் அஸ்பந்த்யார் ஆகியோர் ஆவர். 


பஞ்சாப் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  “அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினின் குடியுரிமை பெற்ற சகோதரிகள், மே 19 அன்று ஸ்பெயினில் இருந்து தங்கள் தாய் அஸ்ரா பீபியுடன் பாகிஸ்தானுக்குத் திரும்பினர். மே 20 ஆம் தேதி இரவு, இரண்டு சகோதரிகளும் அவர்களது தாய் மாமா, ஹனிஃப் என்ற கோகாவின் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் 7 பேர் மீதும், அடையாளம் தெரியாத இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்” என்று கூறினார்.


முதற்கட்ட விசாரணைகள் இது கெளரவக் கொலை என்று காட்டுவதாக குஜராத் காவல்துறை செய்தித் தொடர்பாளர் நவுமன் ஹாசன் கூறினார். ஆணவக் கொலைகள் பாகிஸ்தானில் பயமுறுத்தும் வகையில் வழக்கமாக உள்ளன. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கில் உள்ள பழங்குடிப் பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் அதிகமாக இருக்கின்றன.


பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின்படி, கடந்த ஆண்டு 450க்கும் மேற்பட்ட கெளரவக் கொலைகள் நடந்துள்ளன. கடந்த காலங்களில், தங்கள் குடும்பத்தின் கௌரவத்திற்கு  களங்கம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண்கள் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும், கல்லெறிந்தும், எரித்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண