மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி கடந்த அக்டோபர் 15 அன்று இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையை வென்று, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற பெருமையைத் தட்டிச் சென்றது. இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, என்.சி.சி என்று அழைக்கப்படும் தேசிய மாணவர் படை நடத்திய சந்திப்பு ஒன்றில் தோனி கலந்துகொண்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில், ஐபிஎல் இறுதிப் போட்டியின் அழுத்தத்தையும் தாண்டி, தோனி அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டது குறித்து ஆனந்த் மஹிந்திரா நன்றி தெரிவித்த போது, தோனி போட்டிகளைக் குறித்து அழுத்தத்தில் இல்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளார். 



`ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்கு இரு தினங்களுக்கு முன்பு, மகேந்திர சிங் தோனி தேசிய மாணவர் படையின் மதிப்பாய்வுக் கூட்டத்தின் ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொண்டார். அவர் முழுவதும் தயாராக இருந்ததோடு, சந்திப்பு முழுவதும் முக்கியமான அறிவுரைகளையும் அனைவரும் ஏற்கும்படி அறிவித்தார். ஐபிஎல் தரும் அழுத்தத்தைத் தாண்டி, அவர் இந்தச் சந்திப்புக்காக நேரம் ஒதுக்கியது குறித்து நான் நன்றி தெரிவித்த போது, தோனி அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஆனந்த் மஹிந்திரா. 






தொடர்ந்து ட்வீட் செய்திருந்த அவர், `தலைமைப் பண்பு குறித்த பாடம் ஒன்றை இதில் இருந்து கற்றுக் கொள்ளலாம். அது `சமநிலையைப் பேணுதல்’. மாற்றங்களை ஏற்படுத்தும் வசீகரமான வாய்ப்புகள் அதிகம் கொண்டது வாழ்க்கை. வெறும் ஒரு குறிக்கோளை நோக்கி ஓடாதவர்களும் வாழ்க்கையில் கவனம் பெறலாம். இது எதிர்மறையாகத் தோன்றலாம்; ஆனால் இது உண்மை. வெவ்வேறு குறிக்கோள்கள் மீது ஒரே நேரத்தில் சமநிலையோடு பணியாற்றுங்கள். ஒவ்வொரு பணியிலும் இன்னும் தெளிவு பிறப்பதோடு, மனதைக் கூலாகவும் வைத்துக் கொள்ளலாம்’ எனவும் குறிப்பிட்டிருந்தார். 



கடந்த அக்டோபர் 15 அன்று, துபாயில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் நான்காவது ஐபிஎல் தொடர் வெற்றியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 


ஐபிஎல் கோப்பையை நான்காவது முறை வென்ற பிறகு, வெற்றி குறித்து பேசிய தோனி ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கடுமையான போட்டியைப் பாராட்டியதோடு, தங்கள் தரப்பில் இருந்த குறைபாடுகளை எதிர்காலத்தில் சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதையும் பேசினார். `சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பேசுவதற்கு முன்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குறித்து பேசுவது முக்கியம் எனக் கருதுகிறேன். முதலில் அவர்கள் பெற்றிருந்த இடத்திற்கும், இவ்வளவு தூரம் அவர்கள் கடந்திருப்பதற்கும் கடும் முயற்சிகள் இருக்கின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற வேண்டிய அணி என்று ஒன்று இருந்தால், அது கொல்கத்தா அணியாக இருக்கும். இந்த இடைவெளி அவர்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்’ என்று தோனி கூறினார்.