முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த 9 நாள்களிலேயே அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், அரசியலில் இருந்து கொஞ்ச காலம் தள்ளி இருக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.


அரசியலில் குதித்த ஒரே வாரத்தில் அந்தர் பல்டி:


இந்திய அணிக்காக 55 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடிய ராயுடு, 1694 ரன்களை குவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த இவர், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2010 முதல் 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இவர் 2018 முதல் நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் வரை  தோனியுடன் இணைந்து சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.


இச்சூழலில், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, அம்பதி ராயுடு விரைவில் அரசியல் கட்சியில் இணையப்போகிறார் என்ற தகவல்கள் பரவின. தகவல்களை உண்மையாக்கும் வகையில், ஆந்திர மாநிலத்தில் ஆட்சி கட்டிலில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இணைந்தார்.


ஆந்திர அரசியலில் ட்விஸ்ட்:


விஜயவாடாவில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்த வரவிருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.


 






இச்சூழலில், கட்சியில் சேர்ந்த 9 நாள்களிலேயே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இருந்து ராயுடு விலகியிருப்பது ஆந்திர அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.


வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள்,  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில், அந்த ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், ராயுடு, இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.