ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். கடைசி இரண்டு நாட்களில், கந்தஹார் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியதை தொடர்ந்து தலைநகர் காபுலையும் ஆக்கிரமித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில் தலிபான்கள் வசம் ஆட்சிப் பொறுப்பு சென்றது. இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளதாக அல்ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
''தலிபான் எங்கள கொன்னுடுவாங்க.. இனி சுதந்திரமே இருக்காது'' ஆஃப்கான் விவகாரத்தில் கலங்கிய பெண்!
இந்நிலையில், நேற்று இரவு காபுல் விமான நிலையத்தில் துப்பாகிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், உயிர் சேதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. உலக நாடுகள் தங்களை கைவிட்டுவிட்டதாக ஆப்கானிஸ்தான் மக்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதால், காபூல் நகருடனான விமான போக்குவரத்தை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துவிட்டன. ஆப்கானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். இதனால், காபுல் விமானநிலையத்தில் பதற்ற நிலை நிலவுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. கூட்டம் கூட்டமாக காபுல் விமானநிலையத்தில் குவிந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு வெளியேற போராடி வருகின்றனர். காபுல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முதலில் இருவர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.