இந்தியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி ஆறாம் தேதிவரை நடக்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை, நவி மும்பை, புனே என மூன்று மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடக்கவுள்ளன. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் சீனா, ஈரான், சீன தைபே அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஈரானை (ஜன. 20) எதிர்கொள்கிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி, இந்துமதி, சௌமியா, சந்தியா, கார்த்திகா, மாரியம்மாள் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 23 பேர் கொண்ட இந்திய அணியில் மணிப்பூருக்கு பிறகு தமிழக வீராங்கனைகள்தான் அதிகம் இடம்பிடித்திருக்கின்றனர். மணிப்பூரிலிருந்து 7 பேர்வரை இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
முன்னதாக, இத்தொடரில் முதல்முறையாக 'வீடியோ அசிஸ்ட்டென்ட் ரெப்ரி' (வி.ஏ.ஆர்.,) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 'நாக் அவுட்' போட்டிகளில் இருந்து இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல், புனேயில் உள்ள ஷிவ் சத்ரபதி என 'நாக் அவுட்' போட்டிகள் நடக்கவுள்ள இரு மைதானங்களில் தொழில்நுட்ப வசதிகளை பொருத்தும் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
போட்டி நடக்கும் மைதானங்கள் தவிர, நடுவர்களின் பயிற்சி மையங்கள், தங்கியுள்ள ஹோட்டல்களிலும் இந்த வசதி பொருத்தப்பட உள்ளது. கால்பந்தில் நடுவர்கள் துல்லியமான முறையில் தீர்ப்புகள் வழங்க உதவும் வகையில் வி.ஏ.ஆர்., ('வார்') தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டது. 2018ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்தில் சர்வதேச அளவில் இத்தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது.
இதன்படி கோல் அடிக்கப்பட்டதா, இல்லையா, ஃபெனால்டி தந்தது சரியா, இல்லையா, 'ரெட் கார்டு' தர, 'ரெட்' அல்லது 'மஞ்சள் கார்டு' தவறாக தரப்பட்டதா என்பதை சரியாக கணிக்க நடுவர்களுக்கு வி.ஏ.ஆர்., உதவும். இதற்காக 6 வீடியோ நடுவர்களுக்கு உதவ, பல்வேறு பகுதிகளில் இருந்து 7 கேமராக்கள் நேரடி ஒளிபரப்பை வழங்கும்.
மைதானத்தின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ஸ்கிரீனில் நடுவர் கேட்பதற்கு ஏற்ப 'ரிவ்யூ' வழங்கப்படும். தவிர நடுவர் முடிவு தவறாக இருந்தாலும் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தீர்ப்பு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்