பரபரப்பாக கடந்த சில வாரங்களை கடத்திய அன்னபூரணி அரசு அம்மாவின் புயல், சில நாட்களாக ஓய்ந்திருக்கிறது. ஆனால், அவ்வப்போது, அவர் தொடர்பான வீடியோக்கள் ஏதாவது எட்டிப் பார்த்து செல்கின்றன. அந்த வரிசையில், அவர் நடத்திய இயற்கை ஒளி பவுண்டேசன் மூலம் கடந்த 2020 நவம்பர் 20 அன்று பேசிய காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. ஆன்லைனில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அன்னபூரணி அரசு அம்மா, தனக்கு எப்படி பவர் கிடைத்தது என்று விளக்கியுள்ளார். ‛வணக்கும்.... குருவே...’ என சிஷ்யர்கள் வரவேற்க, இதோ அன்னபூரணி அரசு அம்மா பேசியவை....
‛‛ஆன்மிகம் ஒரு எதார்த்தம். வெளி வேஷத்தை தான் ஆன்மிகம் என அனைவரும் தவறாக நினைத்து அடிமையாகியாக உள்ளீர்கள். தன்னை எப்படி உணர வேண்டும், இறைவனை எப்படி உணர வேண்டும் என்பதை நான் சொல்வதை உள்வாங்கி கேளுங்கள். வெளி வேஷம் போட்டு, ஆன்மிக விசயங்கள் பேசுவதால் நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள்? நடிப்பு, வெளிவேஷம், வெளி அடையாளங்கள் தான் உங்களுக்கு தேவைப்படுகிறது. அதையெல்லாம் தூக்கி போடுங்கள், அது தான் இயல்பு, எதார்த்தம்.
இயற்கை ஒளி உங்களை எப்படி மாற்றுகிறது என்பதை பாருங்கள். இயற்கை கொடுத்த வாழ்க்கையை அனுபவித்து கொண்டாடி, இயற்கை கொடுத்த வேலையை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். யாருக்காகவும் மாற்ற வேண்டும் என்கிற அவசியம் எனக்கு கிடையாது. சத்தியம், யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாது. ஆன்மிகம் என்றால் என்னவென்று தெரியாத, ஆன்மிக வாதி என நடிப்பவர்கள் தான், நான் பேசுவதை உள்வாங்காமல் வெளித்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். குருவில் வெளித்தோற்றத்தை ஆராய்ச்சி செய்பவர்கள், ஆன்மிகத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.
இங்கு எல்லாம் உணர்வு சம்மந்தப்பட்டது. நீங்கள் என்னோடு உணர்வோடு நெருங்க வேண்டும். அந்த உணர்வோடு நீங்கள் என்னுடம் இணைய வேண்டும். உங்கள் அறிவு, ஆணவத்தை கடத்த வைப்பது தான் என்னோட வேலை. தன்னை உணர நினைப்பவர்கள், இந்த உலகை தாண்டி, ஏதோ ஒரு சக்தி செயல்படுகிறது, எந்த இயற்கையை உணரனும், அனுபவிக்கனும் என நினைப்பவர்களை உருமாற்றுவது தான் என்னோட வேலை. ‛என்னிடம் பேசும் போதே... எனக்கு மாற்றம் வருகிறது...’ என ஒரு சகோதரி என்னிடம் கூறினார்.
இந்த பவர் எனக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டனர். இந்த பவம் கிடைக்க நான் எதுவும் செய்யவில்லை. எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இயற்கை செயல்படுகிறது; அதற்கு நான் ஒத்துழைக்கிறேன். அதற்கு முன்னால், நாங்கள் சிலவற்றை கடந்து வந்தோம். நாங்கள் என்பது, அன்னபூரணியாகவும் எடுத்துக் கொள்ளலாம், அன்னபூரணி, அரசாகவும் எடுத்துக்கொள்ளலாம். பல போராட்டங்களை கடந்து, சமுதாய சட்டதிட்டங்களை கடந்து தான் இயற்கை எங்களை இணைய வைத்தது. அதன் பிறகு தான் பொக்கிஷம் கொடுத்து இயற்கை செயல்பட வைத்தது.
உடல் இரண்டாக இருந்தாலும், உயிர் ஒன்றாக தான் நானும் அரசும் இருந்தோம். பின்னர் இயற்கையே உயிரை ஒன்றாக்கியது. ஒரு பலூனில் இருந்த காற்று, இன்னொரு பலூனுக்கு செலுத்தியதை போல எங்கள் இருவரின் உயிர் ஒரே உடலால் இயற்கையால் கலக்கப்பட்டது. இந்த பிறவியே இதற்காக தான் எங்களுக்கு தரப்பட்டது. ஒரு யுகத்திற்கு ஒரு முறை இயற்கை இவ்வாறு செயல்படும். மனிதர் முழுமை அடைய இயற்கை நேரடியா வந்து செயல்படும். அது என்னால் நடக்கிறது. அதனால் தான் நான் பேசும் போதே என்னால் உங்களுக்கு சிலவற்றை உணர முடிகிறது.என்னோட முயற்சி எதுவும் கிடையாது. இயற்கை செய்வதற்கு, நான் ஒத்துழைக்கிறேன்.
உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு என்னுள் உள்ளே உள்ள இயற்கை இறங்கி சரி செய்கிறது. இதை பயன்படுத்த தெரிந்தவர்கள், உணர்ந்து அனுபவத்திற்கு வந்துவிடுகிறார்கள். இங்கே இயற்கையை அறிவால் ஆராய்ச்சி பண்ணி புரிந்து கொள்ள முடியாது. அனுபவத்திற்கு வந்தால் தான் உணர முடியும்,’’
இவ்வாறு அந்த வீடியோவில் அன்னபூரணி அரசு அம்மா பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்