பாலிவுட் நடிகையும், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான நடிகை ஊர்மிளா மடோன்கர் பாலியல் தொல்லைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகட், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறி அவருக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்ற ஜனவரி 18 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திடீரென இவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிஜ்பூஷன் மறுத்தார். ஒருவேளை அப்படி எதுவும் நடந்திருந்தால் தான் தூக்கில் தொங்கத் தயார் எனவும் பிரிஜ்பூஷன் தெரிவித்திருந்தார்.
இந்தப் போராட்டம் அப்போதைக்கு கைவிடப்பட்ட நிலையில், இந்திய விளையாட்டு கழகம், இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு வீரர், வீராங்கனைகள் புகார் குறித்து விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
இந்நிலையில் மூன்று மாதங்கள் கடந்தும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் சிறுமி ஒருவர் உள்பட 7 பேர் பிரிஜ்பூஷண் மீது புகார் தெரிவித்துள்ள நிலையில் அவர் மீது போக்சோ வழக்கு பதிய வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்நிலையில் இவர்களுக்காக பாலிவுட் நடிகையும் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவருமான நடிகை ஊர்மிளா ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார்.
முன்னதாக வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள ஊர்மிளா, இந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தருமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீதி வழங்கப்படாவிட்டால் எந்தவொரு பெண்ணும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ள ஊர்மிளா, பெண்களுடன் நிற்க முடியாவிட்டால் ‘பெண் குழந்தைகளைக் காப்போம்’ எனும் 'பேட்டி பச்சாவோ' முழக்கத்தை சொல்வதில் அர்த்தமில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், “மல்யுத்த வீராங்கனைகளின் குறைகளைக் கேட்டறியுமாறு மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் ஊர்மிளா இந்த வீடியோவில் கோரியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுமார் 6 மாத காலமே இருந்து விலகிய நடிகை ஊர்மிளா, 2020ஆம் ஆண்டு சிவசேனாவில் இணைந்தார். முன்னதாக ராகுல் காந்தியின் தேச ஒற்றுமைக்கான பாத யாத்திரையில் ஊர்மிளா ஜம்மு காஷ்மீரில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.