பொன்னியின் செல்வன் பாகம் 2 நேற்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கி பத்திரிகை ஒன்றில் கல்கி எழுதத் தொடங்கி 1954ஆம் ஆண்டு முடிவுற்ற பொன்னியின் செல்வன் தொடர், 1955ஆம் ஆண்டு புத்தகமாக முழுமைப் பெற்று முதன்முதலில் வெளியானது.


திரைக்கதையில் மாற்றம்


பொன்னியின் செல்வன் நாவல் தொடராக வெளியான காலக்கட்டம் தொடங்கி, 70 ஆண்டு கால தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர் முதல் பலரும் இதை திரைப்படமாக முயற்சித்து தோற்றுப்போன நிலையில், இறுதியாக மணிரத்னத்தின் விடா முயற்சியில் அவருக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு அமையப் பெற்றது.


அதன்படி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் - ஏ.ஆர்.ரஹ்மான், ரவி வர்மன் உள்ளிட்ட சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தொடங்கிய இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுவென நடைபெற்றன.  சென்ற ஆண்டு முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.




இந்நிலையில், கல்கியின் நாவலைத் தாண்டி திரைக்கதைக்காக சில மாற்றங்கள் செய்திருப்பதாக ஏற்கெனவே மணிரத்னம் அறிவித்திருந்தார். அதன்படி முதல் பாகத்திலேயே மணிரத்னம் சில மாற்றங்களை செய்திருந்த நிலையில், அவை சுவாரஸ்யம் கூட்டுவதற்கு பதிலாக நாவல் ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தின.


குடந்தை ஜோதிடர் முதல் மணிமேகலை வரை...


குறிப்பாக வானில் தோன்றிய  வால் விண்மீன் பற்றியும், சோழ சாம்ராஜ்யத்தில் நிகழப்போகும் அசம்பாவிதம் பற்றியும் கூறி நாவலுடன் எடுத்ததும் வாசகர்களை ஒன்றவைக்கும் குடந்தை ஜோதிடர் கதாபாத்திரமே படத்தில் இல்லாதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. குடந்தை ஜோதிடரைக் காணவில்லை என டன் கணக்கில் மீம்ஸ்கள் பறந்தன!


மேலும் குடந்தை ஜோதிடர் வீட்டில் வந்தியத்தேவன் - குந்தவை சந்திக்கும் முதல் காட்சி மாற்றம் செய்யப்பட்டு நடனக்காட்சியாக அது மாற்றப்பட்டது ரசிகர்களை மேலும் கடுப்பேற்றியது. ஆனால் ’அகநக’ பாடல் போன்ற அழகிய தருணங்கள் ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்தின.


சேந்தன் அமுதன் - பூங்குழலிக்கு அநீதி


இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் மணிரத்னம் இதேபோன்ற சில கதாபாத்திரங்களை தூக்கியும், திரைக்கதைக்காக காட்சிகளை மாற்றி அமைத்தும் உள்ளது மீண்டும் பொன்னியின் செல்வன் வாசகர்களை உச்சக்கட்ட அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 





நாவலின் இறுதியில் சேந்தன் அமுதனே மதுராந்தகன் ஆகும்படியும், பூங்குழலி அருண்மொழி வர்மனை மறந்து சேந்தன் அமுதனை மணக்கும் வகையிலும், அவள் ஆசைப்பட்ட அரச வாழ்க்கை அவளுக்கு கிடைக்கும்படியும் கதை அமைந்திருக்கும்.


ஆனால் திரைப்படத்தில் அப்படி ஒரு ட்விஸ்டே இல்லாமல் நடிகர் ரஹ்மானையே மதுராந்தகனாக காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் கதையின் முக்கியக் கதாபாத்திரங்களுள் ஒன்றான பூங்குழலிக்கு இரண்டாம் பாகத்திலாவது அதிக காட்சிகள் இருக்கும் என நம்பி வந்த ரசிகர்களுக்கு இன்னும் பெருத்த ஏமாற்றம்.


மணிமேகலை எங்க... நந்தினியின் முடிவு வேறு!


அதேபோல், நந்தினி கதாபாத்திரத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என கல்கி விட்டுச் சென்ற முடிவை மாற்றியமைத்து மணிரத்னம் காட்சிப்படுத்தியிருப்பது, அந்தக் கதாபாத்திரத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என வாசகர்கள் இணையத்தில் நியாயம் கேட்டு வருகின்றனர்.




மேலும் வந்தியத்தேவனை ஒரு தலையாகக் காதலிக்கும் வீரம் மிக்க பெண்ணான மணிமேகலை கதாபாத்திரத்தை ரசிகர்கள் இந்தப் பாகத்தில் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அக்கதாபாத்திரமே இல்லாதது  பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தேவையில்லாத ஆணி...


தவிர பார்த்திபேந்திர பல்லவனாக நடித்த விக்ரம் பிரபு காட்சிகள், ராஷ்ட்ரகூட போர் போன்ற திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் கூட்டாத காட்சிகளைத் தவிர்த்துவிட்டு இந்தக் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கலாம், மணி சார் சென்ற பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் ஏமாற்றிவிட்டார் என அங்கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்!