ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டது. 

இதில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், சாஹல், குல்தீப் யாதவ், குர்னல் பாண்டியா, தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை. வழக்கமாக ஓப்பனிங் களமிறங்கும் ஷிகர் தவானுக்கு பதிலாக ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய அணி தேர்வு குறித்து கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏபிபி செய்து தளத்துக்கு பேட்டியளித்த 1983 கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், “டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தவான் தேர்வு செய்யப்படாதது, சர்வதேச கிரிக்கெட்டில் அவரது கரியர் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்துகிறது. திறமையான இளம் வீரர்களுக்கு மத்தியில் தவான் தனக்கான ஒரு இடத்தைப் பிடிப்பது மிகவும் சவாலானதாகவே இருக்கும். ” என தெரிவித்துள்ளார். 

டி-20 உலகக்கோப்பைக்கான இந்தியா அணி விவரம் வெளியாவதற்கு முன்பே பேசி இருந்த கபில் தேவ், “இளைஞர்களுக்கு பிறகு வாய்ப்பு அளிக்கலாம், இப்போது இந்திய அணிக்கு தேவை அனுபவம் மட்டுமே. ஒரு வேளை, தவான் அணியில் சேர்க்கப்படவில்லை எனில், அவரது கரியர் முடிவுக்கு வரப்போவதை உணர்ந்து கொள்ளலாம். அவரது இடத்தை நிரப்பு வேறு வீரர்கள் வந்துவிட்டனர்” என தெரிவித்திருந்தார். 

T20 WC, Indian Squad: டி-20 உலகோப்பை இந்திய அணி அறிவிப்பு... தவான் நீக்கம்... தமிழக வீரர்கள் இருவர் சேர்ப்பு!