ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு-டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 8 ஓவர்களுக்குள் 3 விக்கெட் இழந்து 60 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் ராஜாட் பட்டிதார் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக ஏபிடிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


 


ஏபிடிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி வலுவான ஸ்கோரை எட்டியது. பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஏபிடிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உதவியுடன் 42 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். ஏபிடியின் மின்னல் வேக ஆட்டத்திற்கு பிறகு அகமதாபாத் மைதானத்தில் புழுதிப் புயல் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி அணியின் ஆட்டம் சற்று நேரம் தடைப்பட்டது. 




புயலுக்கு பின்பு தொடங்கிய டெல்லி அணியின் ஆட்டத்தில் தொடக்கத்திலேயே ஷிகர் தவான் 6 ரன்களுக்கும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். பின்னர் பிரித்வி ஷாவும் கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டனர். எனினும் பிரித்வி ஷா 21 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஸ்டோய்னிஸ் 22 ரன்களுடன் ஆட்டமிழ்ந்தார். 


 


இதனால் 15 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் டெல்லி அணி வெற்றி பெற 61  ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஹெட்மேயர் மற்றும் பண்ட் ஜோடி அதிரடி காட்ட தொடங்கியது. எனினும் 16ஆவது ஓவரை வீசிய ஜேமிசன் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால் ஆட்டத்தின் 18ஆவது ஓவரை மீண்டும் ஜேமிசன் வீசினார். அதில் ஹெட்மேயர் 3 சிக்சர்கள் விளாசி 21 ரன்கள் எடுத்தார். 




 


இதனைத் தொடர்ந்து கடைசி இரண்டு ஓவர்களில் டெல்லி அணிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் டெல்லி அணி 11 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிப் பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதில்,12 ரன்கள் மட்டும் சிராஜ் விட்டுக் கொடுத்தார்.  இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஹெட்மேயர் 25 பந்துகளில் 53 ரன்களும், ரிஷப் பண்ட் 58 ரன்களும் எடுத்தனர்.இதன்மூலம் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 


இந்த வெற்றியின் மூலம் அணி பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.