கோவாவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த, தடகள வீரர் சித்தார்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுருண்டு விழுந்த வீரர்:
கோவா மாநிலம் பனாஜியில் அயர்ன்மேன் எனும் தலைப்பில் டிரையத்லான் போட்டி நடைபெற்றது. மிராமர் கடற்கரையில் தொடங்கிய போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுகள் அடங்கும். அதன்படி, கடந்த ஞாயிறன்று 1.9 கிலோ மீட்டர் தூரம் நீச்சல் மற்றும் 90 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பந்தயம் ஆகிய போட்டிகளை தொடர்ந்து, இறுதிப் போட்டியான 21 கிலோ மீட்டர் தூரத்திற்கான தொடர் ஓட்டம் நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்திய வீரரான கமக்யா சித்தார்த் எல்லைக் கோட்டிற்கான 500 மீட்டர் தூரத்தில் இருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
இதைகண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக சித்தார்த்திற்கு முதலுதவி வழங்கி, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த சித்தார்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்தது தான் மரணத்திற்கு காரணம்” என நிதின் வல்சன் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த சித்தார்த்?
உயிரிழந்த சித்தார்த் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆவார். 26 வயதான இவர் டெக்னாலஜி ஸ்ட்ராடஜி பிரிவில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரையத்லானுக்கான தான் தயாராகி வந்தது தொடர்பான வீடியோக்களை பல வாரங்களாக அவர் இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு வந்துள்ளார். அதில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பளுதூக்குதல் தொடர்பான பல வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொடியசைத்து தொடங்கி வைத்த ஒரு விளையாட்டு போட்டியில், இந்திய தடகள வீரர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தார்த் குடும்பத்தினருக்கு இரங்கல்:
சித்தார்த் மறைவிற்கு டிரையத்லான் போட்டி ஏற்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கையில், “டிரையத்லானில் பங்கேற்ற ஒருவர் இறந்ததை உறுதிப்படுத்துவதில் நாங்கள் வருத்தமடைகிறோம். தொடர் ஓட்டத்தின் போது எல்லைக்கோட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தபோது, தடகள வீரருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவசர மருத்துவப் பணியாளர்கள் உடனடி மருத்துவ உதவியை வழங்கினர்.
தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக ரன் கோர்ஸில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் மூலம் தடகள வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆன்சைட் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களின் விரைவான பணியை நாங்கள் பாராட்டுகிறோம். சித்தார்த்தின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.