Asian Games 2023 LIVE: 100 பதக்கங்கள் குவிப்பு.. கபடியிலும் கிரிக்கெட்டிலும் தங்கம் வென்று இந்திய ஆண்கள் அணி அசத்தல்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெறும் பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான தகவல்களை இங்கு உடனுக்குடன் அறியலாம்.
ஆண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
ஈரான் அணிக்கு எதிரான கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி 33-29 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று, தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தியாவுக்கு சாதகமாக புள்ளிகள் வழங்கக்கூடாது என ஈரான் வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியா - ஈரான் இடையேயான கபடி இறுதிப்போட்டியில் புள்ளிகளை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பத்தால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது
அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக உலக நம்பர் 1 ஜோடியாக மகுடம் சூடவுள்ள சாத்விக் மற்றும் சிராக் ஜோடி, தென்கொரியாவின் சோய் சோல்கியு மற்றும் கிம் வோன்ஹோ ஆகியோரை வீழ்த்தி பேட்மிண்டனில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. சாத்விக் மற்றும் சிராக் ஜோடி 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
18.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 112 ரன்களை சேர்த்து இருந்தபோது, மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
15 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை சேர்த்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. கடைசியாக கரிம் ஜனத் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்
10 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை சேர்த்துள்ளது.
இந்திய பந்துவீச்சை ஓரளவிற்கு சமாளித்த அஃப்சர் ஜஜாய், 15 ரன்கள் சேர்த்து இருந்தபோது ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
ஒரு ரன் சேர்த்து இருந்தபோது ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார் நூர் அலி. இதனால், 4 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்களை சேர்த்துள்ளது.
மொகமது ஷசாத் 4 ரன்கள் சேர்த்து இருந்தபோது , அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 5 ரன்களை சேர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆடவர் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, வங்கதேசம் அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. மழை காரணமாக போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 48 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், அதிரடியாக விளையாடி கடைசிப் பந்தில் இலக்கை எட்டியது.
ஆசிய விளையாட்டு பிரிவில் ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் யாஷ் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். 10-0 என்ற கணக்கில் கம்போடியாவின் செயாங் சியோனை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த அவர் தஜிகிஸ்தானின் மாகோமெட் எவ்லோவ்வை எதிர்கொள்கிறார்.
2000 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற பதக்கங்கள் பட்டியல் பின்வருமாறு:
2002 - 36 பதக்கங்கள்.
2006 - 53 பதக்கங்கள்.
2010 - 65 பதக்கங்கள்.
2014 - 57 பதக்கங்கள்.
2018 - 70 பதக்கங்கள்.
2023 - 100* பதக்கங்கள்.
ஆசிய விளையாட்டு பிரிவில் இந்திய அணி 100 பதக்கங்களை வென்று அசத்தல் - இன்று காலை 2 தங்கம், ஒரு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை இந்திய வீரர்கள் கைப்பற்றினர்.
வில்வித்தையில் காம்பவுண்ட் ஆடவர் இறுதிப் போட்டியில் இந்திய வீரரான ஓஜாஸ் தங்கப் பதக்கம் வென்றார். அதேநேரம், அபிஷேக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வில்வித்தை - கூட்டு மகளிர் தனிநபர் இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார் ஜோதி. இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் சேவோன் சோவை வீழ்த்தி அசத்தினார். சக இந்திய வீராங்கனயான அதிதி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் செபக் டக்ரா பிரிவில் இந்தியா வெண்கலம் பதக்கம் வெற்றுள்ளது. தாய்லாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் இந்தியா அணி தோல்வி அடைந்தது.
ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் கிரிக்கெட் பிரிவின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆசிய விளையாட்டு ஆடவர் கிரிக்கெட் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதை தொடர்ந்து, குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா - வங்கதேசம் ஆண்கள் அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் விளையாடிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை சேர்த்தது. இந்த அணி இந்த இலக்கை 10வது ஓவரிலேயே எட்டியது.
வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை சேர்த்துள்ளது. தொடர்ந்து, இந்திய அணி இலக்கை வெற்றிகரமாக எட்டினால், இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறும்.
17 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து, 81 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது
வங்கதேச அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, வெறும் 36 ரன்களை மட்டுமே சேர்த்து திணறி வருகிறது
ஆசிய விளையாட்டில் அடவர் கிரிக்கெட்டில் வங்கதேசம் உடனான அரையிறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அன்டிம் பங்கல் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் வில்வித்தை அணி சீனா தைபே அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. ஜோதி, அதிதி மற்றும் பரினீதி ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் பிவி சிந்து, 16-21, 12-21 என்ற கணக்கில் பிங்ஜியாவோவிடம் தோல்வியை சந்தித்து வெளியேறினார்.
இந்திய மகளிர் வில்வித்தை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஜோதி, அதிதி மற்றும் பிரணீத் ஆகியோர் கூட்டு மகளிர் குழு நிகழ்வின் அரையிறுதியில் இந்தோனேசிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போது இந்திய அணி தங்கப் பதக்கத்திற்காக போட்டியிட்டு விளையாடி வருகிறது.
ஜோதி, அதிதி, பரினீதி ஆகியோர் வில்வித்தையில் ஹாங்காங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். கூட்டு தனிநபர் போட்டியில் இந்திய மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர். உண்மையில், இந்திய அணி தனது 72 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக 18 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கு முன் 2018ல் 16 தங்கம் வென்றது. இம்முறை ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கையையும் இந்தியா கடந்துள்ளது. 2018ல் இந்தியா மொத்தம் 70 பதக்கங்களை வென்றது. ஆனால் இம்முறை 81 பதக்கங்கள் வந்துள்ளன.
இந்தியா இதுவரை 18 தங்கம் உட்பட மொத்தம் 81 பதக்கங்களை வென்றுள்ளது. இந்திய வீரர்கள் 12வது நாளான இன்றும் பதக்கங்களை குவிக்க காத்திருக்கின்றன. பேட்மிண்டன், ஸ்குவாஷ், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்காக இந்திய அணியின் வீரர்கள் களம் இறங்குவார்கள். இது தொடர்பான நேரடி அறிவிப்புகளை இங்கே படிக்கலாம்.
சீனாவில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய போட்டியில் இந்தியா பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, 4x400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் அனஸ் முஹம்மது யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் வாரியத்தோடி மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் 3:01.58 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அதே போட்டியில், இந்திய வீரர் கிஷோர் ஜேனா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலான் பெய்ன்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்குவாஷ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஹாங் காங் வீரரை இந்திய வீரர் சவ்ரவ் கோஷல் 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
ஆண்களுக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் தென் கொரியா அணியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
தாய்லாந்து அணிக்கு எதிரான கபடி போட்டியில் இந்தியா மகளிர் அணி 54-22 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
ஹாக்கி போட்டியில் தென் கொரியா அணிக்கு எதிராக பாதி ஆட்டம் முடிந்த நிலையில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில், சீன தைபேயின் யு டிங் லினிடம் தோல்வியுற்ற இந்தியாவின் பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரு எடிஷனில் அதிக தங்கப் பதக்கங்கள் வென்றத, தனது முந்தைய சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. அதன்படி, இந்தியா தற்போது 16 தங்கப்பதக்கங்கள் உட்பட மொத்தம் 73 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் அபய் சிங், அனாஹத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. அரையிறுதியில் மலேசியா அணி வெற்றி பெற்றதால், இந்திய அணி வெண்கலம் வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 3ல் இந்தியா - தென்கொரியா மோதின. இதில், இந்தியாவின் காயத்ரி கோபி சந்த் - டிரிசா ஜாலி இணையை 21-15, 18-21, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தென்கொரிய இணை வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா,
ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அரையிறுதியில் ஹாங்காங் இணையை வீழ்த்தி தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால் சிங் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 69 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 15 தங்கம் தவிர, 26 வெள்ளிப் பதக்கங்களும், 28 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 4வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
92 கிலோ எடை பிரிவினருக்கான குத்துச்சண்டையில் நரேந்தர் வெண்கலம் வென்றுள்ளார்.
மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்திய அணியின் அன்னு ராணி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
1500 மீட்டர் டெக்கத்லான் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்தியாவின் அப்சல் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
சீனாவில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் பரூல் சவுத்ரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்றார். பஹ்ரைனின் ஒலுவாகேமி முஜிதாத் 55.09 விநாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்றார். சியானின் மோ ஜியாடி வெள்ளி வென்றார்.
ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சிங் ஜோடி, பிலிப்பைன்ஸ் ஜோடியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்திய அணிக்கு ஸ்குவாஷ் விளையாட்டில் பதக்கம் உறுதியாகியுள்ளது
ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் தன்வி கன்னா 0-3 என்ற கணக்கில் ஜப்பானின் சடோமி வதனாபேவிடம் தோல்வியடைந்தார்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 54 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 54 கிலோ எடை பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான வில்வித்தையில் நாட்டுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவின் ஓஜாஸ் மற்றும் அபிஷேக் இந்த நிகழ்வின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப் போட்டியில் இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைப்பது உறுதி.
காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. இதன் மூலம் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா சார்பில் பேட்டிங் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பெண்களுக்கான வில்வித்தை அரையிறுதி ஆட்டம் இந்தியாவின் ஜோதி சுரேகா மற்றும் அதிதி கோபிசந்த் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஜோதி 149-146 என்ற புள்ளிக்கணக்கில் அதிதியை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஜோதி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். அதிதி இப்போது வெண்கலப் பதக்கத்திற்காக மற்றொரு போட்டியில் விளையாடுவார்.
ஆசிய விளையாட்டு போட்டி: படகோட்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜூன் சிங், சுனில் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டி: நேபாள அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.
நேபாளத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உதவியுடன் சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய அணி 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. முகமது அனஸ் யாஹியா, நிஹால் ஜோயல், அமோஜ் ஜேக்கப், மிஜா சாக்கோஆகிய நால் வர் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் இந்தியா பதக்கம் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3000 மீட்டர் தடை தாண்டுதல் பிரிவில், இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளிப்பதக்கமும், பிரீத்தி வெண்கலப் பதக்கமும் வெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள வீராங்கனை நந்தினியை திருநங்கை என்று ஸ்வப்னா பர்மன் தன்னுடைய சமூக வலைதளத்தில் விமர்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி: மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆண்களுக்கான 400 மீ தடை ஓட்டம்: அக்டோபர் 3, மாலை 05.05 மணி
பெண்கள் 400 மீ தடை ஓட்டம்: அக்டோபர் 3, 04.50 மணி
ஆண்கள் 800 மீ: அக்டோபர் 3, 05.55 மணி
ஆண்கள் உயரம் தாண்டுதல்: அக்டோபர் 4, மாலை 04.30 மணி
இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய சாதனையை சமன் செய்துள்ளார். இந்த பதிவு லெஜண்ட் பி.டி.உஷா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 55.42 வினாடிகள் எடுத்தார். இதே நேரத்தில் கடந்து வித்யா ராம்ராஜ் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
பெண்களுக்கான இரட்டையர் அரையிறுதிப் போட்டிகள் டேபிள் டென்னிஸில் நடைபெறும். இது காலை 10.15 மணி முதல் விளையாடப்படும்.
இந்திய ஹாக்கி அணி வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 1.15 மணிக்கு தொடங்குகிறது.
ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று 9வது நாள்.. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 8வது நாள் வரை மொத்தம் 53 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 13 தங்க பதக்கமும் அடக்கம். 9வது நாள் ஆட்டங்கள் தொடர்பான நேரடி அறிவிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஆசிய விளையாட்டு பேட்மிண்டனில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்து 2வது இடத்தை பிடித்தது. இதன்மூலம், சீனா வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றது. இந்தியா இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது.
ஆசிய விளையாட்டுத் தொடரில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் குண்டு எறிதல் போட்டியில் மிகவும் வியத்தகு முறையில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். குண்டு எறிதலில் போட்டியில் தஜிந்தர்பால் 20.36 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தொடர்ந்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கு முன், கடந்த 2018 ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் அவினாஷ் சாப்ளே தங்கம் வென்றார்.
பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். தாய்லாந்தின் அர்பிச்சாயா யுபோல் மொத்தம் 19 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், தென் கொரியாவின் ஹியுஞ்சோ யூ வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்தப் பதக்கத்தின் மூலம் ஆசிய விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆடவர் ட்ராப் டீம் பிரிவில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான், ஜோரவர் சிங் சந்து மற்றும் கினான் டேரியஸ் சென்னாய் ஆகியோர் தங்கம் வென்றனர் . இது இந்தியாவின் 11வது தங்கம் ஆகும்.
சீனாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஆசிய போட்டியின் 9வது நாளில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்கள் வென்று இந்தியா பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆண்கள் ஹாக்கி அணிகளுக்கு இடையிலான போட்டியில் மோதிக்கொண்டன. இதில் இந்திய அணி போட்டி தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் முதல் பாதி முடிந்ததும் இந்திய அணி 6 கோல்கள் அடித்து இருந்தது. அப்போது பாகிஸ்தான் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மூன்றாவது பாதியில் இந்தியா மேற்கொண்டு ஒரு கோலும், பாகிஸ்தான் இரண்டு கோல்களும் அடித்தது. இறுதியில் இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 8 கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 8 கோல்கள் என்ற வெற்றி வித்தியாசம் என்பது இதுவரை இந்தியா பாகிஸ்தான் ஹாக்கி வரலாற்றில் இதுவே முதல் முறை.
ஆசிய விளையாட்டுகளில் ஆடவர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் தங்கம் வென்றுள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீரர் சச்சின் சிவாச் 57 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆசிய விளையாட்டு போட்டி: டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
பெண்களுக்கான 54 கிலோ எடைப்பிரிவில் ப்ரீத்தி பன்வார் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ப்ரீத்தி.
டேபிள் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மனிகா பத்ரா தோல்வியை சந்தித்தார். அவர் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான வாங் யிடியிடம் 2-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்திய இணை வெள்ளி வென்றது. இறுதிப்போட்டியில் 14-16 என்ற கணக்கில் சாப்ஜோத் சிங், திவ்யா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜின்சன் ஜான்சன் மற்றும் அஜய் குமார் சரோஜ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். அஜய் 3:51.93 நேரமும், ஜின்சன் 3:56.22 நேரமும் எடுத்து கொண்டனர்.
பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு தங்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியானது மதியம் 12.30 மணி தொடங்குகிறது.
இந்திய தடகள வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நீளம் தாண்டுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆல்ட்ரின் 7.67 மீட்டர் தாவி அசத்தினார்.
இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி 100 மீட்டர் தடை ஓட்டத்தை 13.03 வினாடிகளில் முடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் களமிறங்குகிறார்.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா தங்கப்பதக்க போட்டியில் இன்று களமிறங்குகின்றனர். இந்த இறுதிப் போட்டியானது காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது.
நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் முயற்சியிலேயே 7.97 மீட்டர் தூரத்தை எட்டி முரளி ஸ்ரீசங்கர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முரளி ஸ்ரீசங்கர் தகுதி பெற 7.90 மீட்டர் மட்டும் தேவையாக இருந்தது.
ஆசிய விளையாட்டுகள் 2023: 7 ஆம் நாள் இன்று. நேற்றைய அடிப்படையில் ஆறாவது நாள் முடிவில் இந்தியா 33 பதக்கங்களை வென்றது. இந்திய அணி 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.
குவாஷ் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய அணி தனது இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டியின் முழுநேர முடிவில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
மலேசியாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் முதல் இரண்டு சுற்றுகள் முடிவில் 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆசிய போட்டிகள் தொடரில் மலேசியா அணிக்கு எதிராக இந்திய மகளிர் ஹாக்கி அணி களமிறங்கியுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் ஆடவருக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் வெள்ளி வென்றார்
ஆசிய விளையாட்டு தொடரில் ஹாங்காங் அணிக்கெதிரான மகளிர் ஸ்குவாஷ் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் வெண்கல பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பாலக் தங்கம் வென்றார். இதே பிரிவில் மற்றொரு வீராங்கனை ஈஷா சிங் வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராம்குமார் ராமநாதன், சாகேத் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டு தொடரில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய் அணி வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசலே, அகில் ஷியோரன் ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
ஆசிய விளையாட்டு தொடரில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் ஈஷா சிங், திவ்யா, பாலக் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி, சவுதி அரேபியாவுக்கு எதிராக 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தத். சவுதி அரேபிய அணி சார்பாக மாறன் முகமது இரு கோல்களையும் அடித்தார்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கத்தை உறுதி செய்துள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரிய ஜோடியை 6-1, 6-7 மற்றும் 10-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ராம்குமார் ராமநாதன் - சாகேத் மைனேனி ஜோடி தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஸ்குவாஷ் போட்டியின் குழுநிலை ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் பதக்கம் தற்போது உறுதியாகியுள்ளது.
10 மீட்ட்ர ஏர் பிஸ்டலில் குழு பிரிவில் தங்கம் வென்றஅர்ஜுன் மற்றும் சரப்ஜோத் ஆகியோர், தனிநபர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால், அர்ஜுன் முதல் எலிமினேஷன் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், சரப்ஜோத் நான்காவது இடம் பிடித்தார். இதனால், இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.
10 மீட்ட்ர ஏர் பிஸ்டலில் குழு பிரிவில் தங்கம் வென்றஅர்ஜுன் மற்றும் சரப்ஜோத் ஆகியோர், தனிநபர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதனால், இந்தியாவிற்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் மற்றும் நார்வால் சிவா ஆகியோர் அடங்கிய குழு, 1734.50 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் வூஷு போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் ரோஷிபினா தேவி வெள்ளி வென்றார்.
மிட்செல் மார்ஷ் - ஸமித் கூட்டணியால் ஆஸ்திரேலிய அணி 164 ரன்களுடன் ஆடி வருகிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆனந்த் ஜித்சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் , இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி வீராங்கனை ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார். துப்பாக்கிச்சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு இதுவரை 11 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு பாய்மரப் படகு போட்டியில் தமிழ்நாடு வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டு - துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் ஸ்கீட் பிரிவில் இந்திய அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. வீர் சிங் அங்கத், குர்ஜோத் சிங் கங்குரா, ஆனந்த் ஜீத் சிங் நருகா ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் , இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50மீ துப்பாக்கி சுடுதல் தனி நபர் பிரிவில் இந்தியாவின் சிஃப்ட் கவுர் சாம்ரா தங்கம் வென்றார். இன்று ஒரே நாளில் இந்தியா 2வது தங்கத்தை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மனு பாக்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வார் ஆகியோர் கொண்ட இந்திய அணி பதக்கம் வென்று அசத்தல்
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என, இந்தியா மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளது. இதனால், இந்திய அணி பதக்கப்படியலில் 7வது இடத்தில் நீடிக்கிறது.
துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. சிஃப்ட் கவுர் சாம்ரா, ஆஷி சௌக்சே மற்றும் மனினி கௌசிக் ஆகியோர் அடங்கிய வெள்ளிப் பதக்கம் வென்றது.
குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர். குதிரையேற்றத்தில் அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா 209.205 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.
பாய்மர படகுப்போட்டியில் மகளிருக்கான டிங்கி ILCA4 பிரிவில், இந்தியாவை சேர்ந்த 17 வயதே ஆன நேஹா தாக்கூர் 27 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் நோப்பாஸார்ன் குன்பூஞ்சன் 16 புள்ளிகளுடன் தங்கமும், சிங்கப்பூரின் கெய்ரா மேரி கார்லைல் 28 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
நீச்சல் போட்டியில் 4x100 மெட்லே ரிலே பிரிவில் இந்திய அணி தேசிய சாதனையை முறியடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஸ்ரீஹரி, லிகித், சஜன் மற்றும் தனிஷ் ஆகியோர் அடங்கிய அணி, 3:40.84 வினாடிகளில் இலக்கை கடந்து ஒட்டுமொத்தமாக 4வது இடத்தைப் பிடித்தது
சீன தைபேயின் ஜியா வென் சாயை எதிர்த்து இப்போன் மூலம் தனது ரெபிசேஜ் சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் துலிகா மான், பெண்கள் +78 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆடவருக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்திய தனது முதல் குரூப் போட்டியில், சிங்கப்பூரை 3-0 என வீழ்த்தியது. மாலை 4.30-க்கு நடைபெற உள்ள இரண்டாவது குரூப் போட்டியில், இந்தியா - கத்தார் அணிகள் மோத உள்ளன.
பெண்களுக்கான தனி நபர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பவானி தேவி 7-15 என்ற கணக்கில் சீனாவின் ஷாவோ யாகியிடம் தோல்வியடைந்தார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பவானி தேவி, நிச்சயம் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனாவின் ஷாவோ யாகியிடம் 7-15 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவி தோல்வியுற்று, தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவின் அவதார் சிங், காலிறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தாஃபர் கோஸ்டோவை எதிர்கொண்டு தோல்வ்யுற்றார். துலிகா மான் மகளிருக்கான +78 கிலோ பிரிவில் காலிறுதிப் போட்டியில் ஜப்பானின் டொமிடா வகாபாவை எதிர்கொண்டு தோல்வியுற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
துப்பாக்கி சுடுதல்: 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான பரபரப்பான போட்டியில் திவ்யான்ஷ்-ரமிதா அடங்கிய இந்திய அணி தோல்வியடைந்தது. இறுதி வரை கடுமையாக போராடிய அவர்கள், தென்கொரியாவிடம் தோல்வியை தழுவி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தனர்
மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது, ஜோஷ்னா சின்னப்பா மற்றும் அனாஹத் ஆகியோர் அடங்கிய அணி
இந்தியாவின் அவதார் சிங், தாய்லாந்தின் கிட்டிபோங் ஹன்ட்ராடினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து அவர் காலிறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தாஃபர் கோஸ்டோவை எதிர்கொள்ள இருக்கிறார். துலிகா மான் மகளிருக்கான +78 கிலோ பிரிவில் சீனாவின் மக்காவோவைச் சேர்ந்த லாய் குயிங் லாமுவை வீழ்த்தி காலிறுதியை எட்டினார். அதில் ஜப்பானின் டொமிடா வகாபாவை எதிர்கொள்ள இருக்கிறார்.
இந்திய வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு போட்டிய்ன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், தாய்லாந்தின் டோன்காவ் போகாவ்வை 15-9 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம், பவானி தேவி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் திவ்யான்ஷ் மற்றும் ரமிதா ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான சுற்றிற்கு முன்னேறியுள்ளது
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஹாக்கி லீக் போட்டியில், இந்திய ஆடவர் அணி தற்போது வரை 6-0 என முன்னிலை வகித்து வருகிறது
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வாள்சண்டை போட்டி இன்று தொடங்கியது. இந்திய சார்பில் பங்கேற்ற பவானி தேவி, லீக் சுற்றில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
குழுநிலை ஆட்டத்தில் இந்திய கூடைப்பந்து அணி 20-16 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில், இந்தியா இலங்கைக்கு 117 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்தனர். இலங்கை தரப்பில் உதேஷிகா, சுகந்திகா, ரன்வீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா-பாம்ப்ரி ஜோடி 6-2, 3-6, 6-10 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர்களிடன் தோல்வியை சந்தித்தனர்.
ஆசிய விளையாட்டு போட்டி: டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மகளிர் கிரிக்கெட் அணியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. தங்கப் பதக்கத்திற்காக இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்துள்ளது.
ஜூடோ 16வது சுற்றில் பிலிப்பைன்ஸின் யோகோ சாலியன்ஸுடம் கரிமா சவுத்ரி தோல்வியை சந்தித்தார்.
25 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் விஜய்வீர் சித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மேலும் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. விஜய்வீர் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டலில் 582 புள்ளிகள் எடுத்துள்ளார்.
இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றில் பேக் ஸ்ட்ரோக் போட்டியில் 50 மீட்டர் தூரத்தை 30.06 வினாடிகளில் கடந்து நீச்சலில் இந்தியாவின் மனா படேல் ஆறாவது இடம் பிடித்தார். இதன்மூலம், இவரால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியவில்லை.
ஆசிய விளையாட்டு 50 மீட்டர் நீச்சல் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஸ்ரீ ஹரி நடராஜ்
ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் கிங் தோமர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 4 இறுதி ஏ பிரிவில், இந்தியாவின் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் அடங்கி அணி வெண்கலம் வென்றனர். இது இந்திய அணி வெல்வது 7வது பதக்கமாகும்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 1893.7 மதிப்பெண்களுடன் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர், ருத்ரன்காஷ் பாட்டீல் ஆகியோர் தங்கம் வென்று உலக, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாதனைகளை முறியடித்தனர்.
டேபிள் டென்னிஸ் ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. அதில், தொடக்கத்தில் 0-2 என பின் தங்கியிருந்த சரத் கமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 3-2 என்ற கணக்கில் கென்சிகுலோவை தோற்கடித்தார். தொடர்ந்து, காலிறுதிச் சுற்றில் இந்திய அணி தென் கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஜப்பான் அணிக்கு எதிரான வாலிபால் காலிறுதிப் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்றது
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 54 கிலோ எடைப்பிரிவு மகளிர் குத்துச்சண்டை போட்டியில், ஜோர்டானின் எஸ் அல்ஹாசனத்தை ஆர்எஸ்சி மூலம் இந்திய வீராங்கனை பிரீத்தி தஹியா வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். அந்த சுற்றில் கஜகஸ்தானின் Z ஷெகர்பெகோவாவை எதிர்கொள்கிறார்.
இந்தியாவின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான சுமித் நகல், ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மாக்கோவை சேர்ந்த லியுங் ஹோ டின் மார்கோ 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சுமித் நகல் வெற்றி பெற்றுள்ளார்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, உஸ்பெகிஸ்தானை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸில், இந்திய மகளிர் அணி தாய்லாந்தை எதிர்கொண்டது. இறுதிச்சுற்றில் மனிகா பத்ரா 12-10, 8-11, 7-11, 6-11 என்ற கணக்கில் சுதாசினி சாவெட்டாபுட்டிடம் தோல்வியுற்றார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்திடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
19வது ஆசிய போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் ரமிதா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் இந்த போட்டியில் 230.1 புள்ளிகளை பெற்றார். சீனாவின் ஹான் ஜியாயு 251.3 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கமும், அவரது சகநாட்டவரான ஹுவாங் யூடிங் 252.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் வென்றனர். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீரரான மெஹுலி கோஷ் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
19வது ஆசிய போட்டியின் ஹாக்கி விளையாட்டில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா, தனது முதல் லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டுள்ளது. இதில், தற்போது வரை இந்திய அணி 4-0 என முன்னிலை வகிக்கிறது
19வது ஆசிய போட்டியில் மகளிர் பிரிவில் நான்கு பேர் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய அணி 7:12.40 விநாடிகளில் இலக்கை எட்டிய நிலையில், சீனா தங்கப் பதக்கம் வென்றது.
19வது ஆசிய போட்டிகளில் 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றது. இந்தியா 5:43.01 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி வென்றது. சீனா தங்கமும், இந்தோனேசியா வெண்கலமும் வென்றன. இந்தியா இன்று வெல்லும் மூன்றவாது வெள்ளிப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது
19வது ஆசிய போட்டியில் கிரிக்கெட் விளையாட்டில் மகளிர் அரையிறுதிப் போட்டியில், வங்கதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கள் வெல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. 8.2 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டியது
19வது ஆசிய போட்டியில் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தாய்லாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது. ஒற்றையர் பிரிவின் முதல் போட்டியில் இந்தியாவின் மணீகா பத்ரா 0-3 என்ற கணக்கில் ஒரவான் பரனங்கிடம் தோல்வியுற்றார்
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், வங்கதேச மகளிர் அணி 17.5 ஓவர்களில் வெறும் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணியில், அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 12 ரன்களை சேர்த்தார். இந்தியா தரப்பில் வஸ்த்ரகர் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு எதிரான அரையிறுதியில், வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 16 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் படகு போட்டி விளையாட்டில் லைட்வெயிட் ஆண்கள் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில், அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் 6:28.18 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றனர். சீனா 6:23.16 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது, உஸ்பெகிஸ்தான் வெண்கல பதக்கத்தை தனதாக்கியது
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் பதக்கமாக 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் சீனா 1896.6 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. 1886 புள்ளிகளுடன் இந்தியா வெள்ளிப் பதக்கமும், மங்கோலியா 1880 புள்ளிகள் உடன் வெண்கலப் பதக்கமும் வென்றது.
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா அடுத்தடுத்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று தனது கணக்கை தொடங்கியுள்ளது.
Background
சீனாவின் ஹாங்சோவ் மாநகரில் தொடங்கியுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி, கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஓராண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. அக்டோபர் 8ம் தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது.
தொடக்க விழா:
போட்டியின் தொடக்க விழா ஹாங்சோவில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் மைதானத்தில் தொடங்கியது. இதில், சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். பல நாட்டு தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர். அதேநேரம், போட்டியில் பங்கேற்க அருணாச்சலபிரதேசத்தை சேர்ந்த வீரர்களுக்கு சீனா விசா வழங்க மறுத்ததால், தொடக்க விழாவில் பங்கேற்க இருந்த இந்திய விளையாட்டு அமைச்சர் தனது சீன பயணத்தை ரத்து செய்தார். ம் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
போட்டிகளின் விவரங்கள்:
மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடைபெற உள்ளன. அதன்படி, கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பங்கேற்பாளர்கள்:
இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர் விராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெற்ற, 18வது ஆச்ய விளையாட்டுப் போட்டிய்ல் பங்கேற்றவர்களை விட அதிகமாகும். ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, இலங்கை, கத்தார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன. 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா, 16 தங்கம் உள்பட 70 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இந்த முறை 100 பதக்கங்களுக்கு மேல் குறிவைத்து உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -