இன்று, இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு விடயம் உண்டு என்றால், அது கிரிக்கெட் என்று சட்டென்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு கிரிக்கெட், பலரின் வாழ்க்கையில் ஊடுருவி இருக்கிறது என்றால் மிகையில்லை. ஆனால், ஒரு காலத்தில், பணம் படைத்தவர்களும் செல்வாக்கு மிகுந்தவர்களும் மட்டுமே ஆடக்கூடியதாக இருந்த கிரிக்கெட், மக்களின் விளையாட்டாக, நம்பிக்கையை தரக்கூடிய  விளையாட்டாக மாறிய நாள் ஜூன் 18-ம் தேதி.. கடந்த 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இடம்பெற்ற தரமான சம்பவமொன்றுதான், இந்தியாவில், கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றியது என்றால் மிகையில்லை.


1983 உலககோப்பை:


40 ஆண்டுகள் கழித்தும் இன்று மட்டுமல்ல, கிரிக்கெட் உள்ளவரை என்றென்றும் பசுமரத்தாணி போல் அந்தச் சம்பவம் பதிந்திருக்கும். அந்த சம்பவத்தின் நாயகன் கபில்தேவ். ஆட்டம் முடிந்துவிட்டது, இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என ஸ்டேடியத்தில் இருந்து பலர் வீட்டுக்கு திரும்ப ஆரம்பிக்கும் நேரத்தில், பேயாட்டம், மிகத் தரமான சம்பவம், அட்டகாசமான ஆட்டம் என எப்படி வேண்டுமானாலும் அடைமொழி கொடுத்துக் கொள்ளலாம். அப்படியொரு ஆட்டத்தை கொடுத்தார் இந்தியாவின் இளம்சிங்கம் கபில்தேவ். 


ஜூன் 18-ம் தேதி, 1983-ம் ஆண்டு. உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டின் லீக் போட்டிகளில், இந்தியாவை விட தரவரிசையில் கீழே இருந்த ஜிம்பாப்வே  அணியுடனான ஆட்டம். இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றால்தான், அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேற முடியும் என்ற நிலை. இப்படியொரு நிலையில்தான்,  இங்கிலாந்தின் டன்பிரிட்ஜ் வெல்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சுனில் கவாஸ்கர் பூஜ்யம், நம்மவூரு ஸ்ரீகாந்த் பூஜ்யம் என வெளியேற, அடுத்த வந்த மொகீந்தர் அமர்நாத் 5 ரன்களுக்கும், சந்தீப் பாட்டில் 1 ரன்னுக்கும், யஷ்பால் சர்மா 9 ரன்களுக்கும் வெளியேற, 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என படுபாதாளத்தில் இருந்தது இந்திய அணி. 


கபில்தேவ் ருத்ரதாண்டவம்:


இந்தியாவின் கதை முடிந்தது என்று இந்திய ரசிர்களே  எண்ணிய போது, இளம் சிங்கம் கேப்டன் கபில்தேவ் களமிறங்கினார்.  அடுத்த 2 மணி நேரத்திற்கு நடந்தது எல்லாம் கிரிக்கெட் உலகின் சரித்திரத்தில் பொன்னெழுத்துளில் பதிக்கப்பட்டது. 138 பந்துகளில், 6 சிக்சர்கள், 16 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 175 ரன்களைக் குவித்தார் கபில்தேவ். அவருக்குப் பக்கபலமாக ரோஜர் பின்னி (22), மதன்லால் (17), சையத் கிர்மானி (24*) ஆகியோர் இருந்தனர். 60 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்பிற்கு 266 ரன்களைக் குவித்தது இந்தியா, அதன்பின் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 235 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது இந்தியா. 


முக்கியமான வீரர்களின் 5 விக்கெட்களை இழந்து, 17 ரன்கள் என தடுமாறிய இந்திய அணி, அதளபாதளத்தில் இருந்து மீட்டது மட்டுமல்ல, ஒற்றுமையாகப் போராடினால், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை கொடுத்தார் கபில்தேவ். அதன்பின் இந்திய கிரிக்கெட்டின் பாதையே மாறியது.  சின்ன அணியாக இருந்த இந்திய அணி, அதன்பின் வீறுகொண்ட சிங்கமாக வெற்றி நடைப் போட்டு, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. 


ஏன் ஒளிப்பதிவு செய்யவில்லை?


இன்று 2 சிக்சர் அடித்தாலே, அதைப் பல கோணங்களில் ரசித்து, ரசித்து பல ஆண்டுகள் பார்க்கும் நாம், அந்த அற்புதமான கபில்தேவ்வின் 175 ரன்களை முழுமையாக இன்றுகூட பார்க்க முடியாது.  ஏன் இந்த கொடுமை தெரியுமா. அன்றைய  தினத்தில், உலகக் கோப்பையில் 4 லீக் போட்டிகளில் நடந்திருக்கிது. இந்தப் போட்டிகளையெல்லாம், பிபிசி-தான் ஒளிப்பதிவு செய்திருக்கிறது. வெஸ்ட் இன்டீஸ் – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து- பாகிஸ்தான், நியூஸிலாந்து -இலங்கை, இந்தியா – ஜிம்பாப்வே என நான்கு லீக்  ஆட்டங்கள். அன்றைய காலக்கட்டத்தில், இருந்த வசதிகளின் அடிப்படையில், முக்கியத்துவம் வாய்ந்த வெஸ்ட் இன்டீஸ் - ஆஸ்திரேலியா, இங்கிலாந்து – பாகிஸ்தான் ஆட்டங்களை மட்டுமே மல்டி கேமரா கொண்டு பிபிசி ஒளிப்பதிவு செய்துள்ளது. மேலும், நியூஸிலாந்து – இலங்கை ஆட்டத்தைக்கூட ஒரே ஒரு கேமரா கொண்டு ஒளிப்பதிவு செய்துள்ளது. 


ஆனால், 4-வது லீக் ஆட்டமான ஜிம்பாப்வே – இந்தியா லீக் ஆட்டத்திற்கு, போதிய முக்கியத்துவம் இல்லாததாலும் கேமரா உள்ளிட்ட பல்வேறு லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினைகள் காரணமாக, ஒளிப்பதிவு செய்யவில்லை. ஆனால், பிபிசி-யில் அப்போது வேலைநிறுத்தம் நடந்ததால், இந்த ஆட்டத்தை பதிவு செய்யவில்லை எனச் சொல்வோரும் உண்டு. ஆனால், உண்மையில் இந்த ஆட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததால், போதிய உபகரணங்கள்  இல்லாததால் ஒளிப்பதிவு செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஆனால்,இன்று கூட கபில்தேவ் ஆட்டத்தின் சில காட்சிகள் நமக்கு கிடைக்கும். அது ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து, பிறகு வந்து எடுத்தவை. சில காட்சிகள், பார்வையாளர்கள் எடுத்தவை. ஆனால், முழுமையான ஆட்டத்தின் ஒளிப்பதிவு இல்லை. இதனால், இந்தக் கட்டுரையின் தலைப்பில் சொல்லியிருந்தோம், “கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ்… மறக்க முடியாத தரமான சம்பவம் வரலாற்று சாதனையை ரெக்கார்ட் செய்யாத வினோதம் ஏன், ஏதற்கு என்று குறிப்பிட்டிருந்தோம். 


அழிக்க முடியாத கோஹினூர் வைரம்:


இந்த ஆட்டம், கபில்தேவின் நம்பிக்கையை, இந்தியாவில் கிரிக்கெட்டின் பாதையை மாற்றியது. நடந்துப் போய்க் கொண்டிருந்த கிரிக்கெட் வளர்ச்சி, பென்ஸ் கார் வேகத்திற்கு மாறியது. அது தற்போது, அசுர வேகத்தில் ராக்கெட்டாக பறந்துக் கொண்டிருக்கிறது. இதில் இருந்து நாம் அறிய வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், எந்த நிமிடமும் நம் வாழ்க்கையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சூழலையும் மாற்றும் தன்மை கொண்டது. ஒற்றுமையுடன் முழு உணர்வுடன் போராடினால், அனைத்தும் சாத்தியம் என்பதுதான். எது எப்படி இருந்தாலும், 40 ஆண்டுகளுக்கு முன் கபில்தேவ் நடத்திய அந்த தரமான சம்பவம், என்றென்றும் அழிக்கமுடியாக கோஹினூர் வைரம் என்றால் மிகையில்லை.  இப்படிப்பட்ட அபார, அரிய சாதனையை செய்த கபில்தேவ், அதன்பின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட போன்ற மறக்கக்கூடிய சம்பவங்களும் அதன்பின் அரங்கேறியதும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாதவை.