தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  டாஸ்மாக்  மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


டாஸ்மாக் கடைகள்


தமிழ்நாட்டில் சுமார் 5,329 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மது விற்பனை என்பது அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மூலமே நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பண்டிகை காலத்தில் விற்பனை மேலும் அதிகமாக தான் இருக்கும்.


அதேநேரம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் என பலரும் மதுவுக்கு அடிமையாகி வருவதால் தமிழ்நாட்டில் மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் சட்டப்பேரவையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்கான பணிகளும் தற்போது அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அமைச்சர் முத்துசாமி பதில்


இந்நிலையில், ஈரோட்டில் பல்வேறு பகுதியில் புதிய தார்  சாலை பணிகளை அமைச்சர் முத்துசாமி 
தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி ”கள்ளச்சாராயத்தை தடுக்க முதலமைச்சர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  டாஸ்மாக்  மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை. தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பது தான்" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


மேலும், ”கீழ்பவானி கால்வாயில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானமாக செல்ல வேண்டும். எந்த தரப்பிற்கும் நாங்கள் ஆதரவாக இல்லை.  போராட்டம் என்பதற்காக ஒரு படையை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகள் குறைகளை தெரிவித்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயாராக உள்ளது” என்றார் அமைச்சர் முத்துசாமி.


இதற்கிடையில், தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  இதனால் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


Minister Senthil Balaji: காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி - மேல் முறையீடு செய்த அமலாக்கத்துறை: நாளை மறுநாள் விசாரணை