உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அண்மையில் நடந்து முடிந்தது. அதில், பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து டிசம்பர் 18ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே மகுடத்திற்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.


இந்நிலையில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றால் பாரிஸ் நகரில் லட்சக்கணக்கானோர் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக கூடலாம். இதனால் ஃப்ரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் கூறினார். பாரிஸ் நகரில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


பிரான்ஸ் நாடு கடந்த 1998 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை வென்றிருக்கிறது. கடைசியாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் 6 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் வரும் ஞாயிறு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வழக்கமாக வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும் பகுதியில் ஏராளமான போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் ஞாயிறு வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறும் பகுதியில் மைனஸ் டிகிரி வெப்ப நிலை நிலவும் கூடவே மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருப்பினும் கால்பந்து ஆர்வலர்கள் இதையும் தாண்டி வெற்றிக் கொண்டாட்டத்திற்காக குவிவார்கள் என்று தெரிகிறது.


பெல்ஜியத்தில் நடந்த மோதல்


அண்மையில் பெல்ஜியத்தில் மொராக்கோ ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டதும் கூட இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. காலம்காலமாக உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி இருந்தது ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மொராக்கோ. பிரான்ஸ் அணிக்கு எதிராக அரையிறுதியில் தோல்வியை தழுவியது அந்த அணி. தோல்வி கொடுத்த விரக்தியால் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடியிருந்த மொராக்கோ ரசிகர்கள், போலீஸாருடன் மோதி உள்ளனர். பட்டாசுகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு போலீஸாரை நோக்கி ரசிகர்கள் வீசியதாக தகவல். கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர் போலீஸார்.


அதேபோல் பாரிஸ் நகரிலும் மொராக்கோ ரசிகர்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் தொடர்பாக 115 பேர் கைது செய்யப்பட்டனர்.