சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாக உள்ளது. இது ஏன் என்பது பற்றி பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். அதனைப் பற்றி காணலாம்.
கேரள மாநிலம் பத்தின திட்டா மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர் வரை பல்வேறு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி சுமந்து பெருவழி மற்றும் சிறுவழி பாதைகளை தேர்ந்தெடுத்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். சபரிமலையை பொறுத்தவரை கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாக அறியப்படுகிறது இது ஏன் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
அதாவது சூரியனின் ஒளியானது எல்லா கோயில்களின் விக்ரங்கள் மீது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நேரடியாக விழும். உதாரணமாக சென்னையில் மிகவும் பிரபலமான திருவேற்காடு தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சூரிய ஒளியானது அம்பாள் மீது விழுவதைக் காணலாம். அந்த அமைப்பில் தான் கோயிலையும் கட்டியிருப்பார்கள். அந்த மாதிரி ஒவ்வொரு ஊரிலும் இயங்கும் ஒவ்வொரு கோயிலும் அந்த மாதிரி அமைப்பில் கட்டியிருப்பார்கள். சில கோயில்களில் மாசி மாதம், சில கோயில்களில் சித்திரை மாதம் அந்த சூரிய ஒளி படும் நிகழ்வானது இருக்கும். அதற்கேற்ப கோபுர நிழலில் இருந்து சூரிய ஒளி கர்ப்ப கிரகத்தில் உள்ள சுவாமி மீது படும். இது வருடத்திற்கு ஐந்து நாட்கள் அல்லது பத்து நாட்கள் படும். வருடம் முழுவதும் சூரிய ஒளி படுகிற மாதிரி எந்த கோயிலும் வைத்திருக்க மாட்டார்கள். சூரிய ஒளி படும்போது சுவாமியின் பலம் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.
அப்படியான நிலையில் சபரிமலையில் வருடம் முழுக்க சூரிய ஒளி கோயில் கர்ப்ப கிரகத்தின் மீது விழும். அதனால் பெரும்பாலான நாட்களில் அந்த கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சூரியனின் சக்தி குறைவாக இருக்கும். மழைக்காலம், பனிக்காலம் என்பதால் சூரியன் தாமதமாகத்தான் உதிப்பார். அதனால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் எல்லாம் சபரிமலை நடை திறப்பு இருக்கிறது.
கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்டு கிட்டதட்ட ஒன்றரை மாத காலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.அதன்பிறகு மண்டலபூஜை நடைபெற்று நடை அடைக்கப்படும். பின்னர் மகர விளக்கு பூஜைக்காக 4 நாட்கள் கழித்து நடை திறக்கப்பட்டு இறுதியாக ஜனவரி மாதம் 20 அல்லது 21ம் தேதி நடை அடைக்கப்படும். மற்ற தமிழ் மாதங்களில் மாதப்பிறப்பில் இருந்து 5 நாட்கள் மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.