Sabarimala Malai: கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது ஐயப்பனே ஆகும். ஏனென்றால் உலகெங்கும் வசிக்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.

Continues below advertisement

ஐயப்பனுக்கு எப்போது மாலை அணியலாம்?

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வேண்டிக்கொண்டு மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்குச் செல்வது வழக்கம். நடப்பாண்டில் ஐயப்பனுக்கு எப்போது பக்தர்கள் மாலை அணியலாம்? என்பதை கீழே காணலாம்.

பொதுவாக ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் பக்தர்கள் மாலை அணிவார்கள்.  நடப்பாண்டிற்கான கார்த்திகை மாதம் வரும் நவம்பர் 17ம் தேதி பிறக்கிறது. இந்த வருடம் கார்த்திகை மாதம் 1ம் தேதி திங்கள்கிழமை பிறக்கிறது. திங்கள்கிழமை என்றாலே சோமவாரம் ஆகும். சோமவார திங்கள் என்றாலே அனைத்திற்கும் ஆதியான சிவபெருமானுக்கு உகந்த நாள் ஆகும்,

Continues below advertisement

இதனால், ஐயப்ப பக்தர்கள் நடப்பாண்டில் கார்த்திகை மாதம் 1ம் தேதியே மாலை அணிந்து கொள்ளலாம். சிவபெருமானுக்கு உகந்த அந்த திங்கள்கிழமையில் மனதார ஐயப்பனை வேண்டி மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

எந்த நேரத்தில் அணியலாம்?

நடப்பாண்டிற்கான கார்த்திகை மாதம் 1ம் தேதி பிரதோஷ நன்னாளில் வருகிறது.  இதனால், அன்றைய நாளில் ராகுகாலமான காலை 7.30 மணி முதல் காலை 9 மணி தவிரவும், எமகண்ட நேரமான காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை தவிரவும் எப்போது வேண்டுமானாலும் மாலை அணிந்து கொள்ளலாம். 

இந்த கார்த்திகை மாதமானது ஐயப்பன் மட்டுமின்றி சிவபெருமான், முருகப்பெருமானுக்கும் உகந்த மாதம் ஆகும். கார்த்திகை தீபம் நன்னாள் கோலாகலமாக சிவாலயங்களிலும், முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும். 

கடும் விரதம்:

சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் அசைவ உணவுகள் தவிர்த்து, செருப்பு ஆகியவற்றை அணிவதை தவிர்த்து கடும் விரதம் இருந்து மலைக்குச் செல்வார்கள். ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிப்பதற்காக ஒரே நாளில் லட்சக்கணக்கில் குவிவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக சபரிமலையில் ஏராளமான சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இணையவழியில் முன்பதிவு செய்த பக்தர்கள் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்கள் 20 ஆயிரம் பேரும் தினசரி ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் வரும் டிசம்பர் 27ம் தேதி வரை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். பின்னர், டிசம்பர் 30ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு மகரவிளக்கு ஜோதி ஜனவரி 14ம் தேதி நடக்கிறது. பக்தர்களின் தரிசனத்திற்காக ஜனவரி 20ம் தேதி வரை ஐயப்பன் கோயில் திறந்திருக்கும். 

சிறப்பு பேருந்துகள், ரயில்கள்:

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்த கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு மட்டுமின்றி முருகப்பெருமானுக்கும் மாலை அணிந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.