சிவராத்திரி என்பது சிவன், சக்தியின் கூடலை கொண்டாடும் விழா. இந்துக்கள் மாதந்தோறும் சதுர்தசி திதி நாளில் கிருஷ்ண பக்ஷத்தில் இந்த சிவராத்திரியை கொண்டாடுகின்றனர்.
இந்த நாளில் பெரும்பாலான பக்தர்கள் விரதம் கடைபிடிக்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை வரும் மஹா சிவராத்திரிக்கு எப்படி விரதம் கடைபிடிக்கின்றனரோ அதேபோல் மாத சிவராத்திரிக்கும் விரதம் இருக்கும் தீவிர சிவ பக்தர்கள் உண்டு.
மகா சிவராத்திரி என்றால் 'சிவபெருமானின் சிறந்த இரவு' என்று பொருள். இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனை வழிபடுவார்கள்.
இந்துக்களின் புராணங்களின்படி மஹா சிவராத்திரி நாளில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றுகிறார். அது முதன்முதலில் ஒரு மகா சிவராத்திரி நாளில் தான் நிகழ்ந்தது. விஷ்ணுவும், பிரம்மனும் தான் அந்த சிவராத்திரி நாளில் லிங்க வடிவில் சிவனை முதன்முதலில் தரிசித்தனர். மாத சிவராத்திரியன்று விரதம் மேற்கொள்ளும் நபர்களின் வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார்.
மாத சிவராத்திரி 2023: தேதி
2023 ஆம் ஆண்டின் முதல் மாத சிவராத்திரி இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 20 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
மாத சிவராத்திரி 2023: சுப முகூர்த்தம்
இந்த ஆண்டு சதுர்தசி திதி வெள்ளிக்கிழமை ஜனவரி 20 2023 காலை 9.59 மணியளவில் தொடங்குகிறது. ஜனவரி 21 காலை 6.17 மணிக்கு இது முடிவடைகிறது. சிவபூஜைக்கான முகூர்த்த நேரம் ஜனவரி 21 காலை 12.11 முதல் 1.04 வரையாகும்.
மாத சிவராத்திரி 2023: பூஜை விதி மற்றும் மந்திரம்
சிவராத்திரி புனித நாளில் அதிகாலையில் குளித்துவிட வேண்டும். சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கு போட வேண்டும். பழங்கள், இனிப்புகளை சிவபெருமானுக்கு படையலாக இடலாம். சிவன் சாலிஸம் படிக்க வேண்டும். அன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். கோதுமை பண்டங்களும் உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு இருக்கக் கூடாது.
சிவராத்திரி என்பது சிவனின் ராத்திரி. அன்றைய நாள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் ஓம் நமசிவாய என ஜெபித்து சிவனை பூஜிப்பபவர்கள் மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா நோயும் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர்.
மாத சிவராத்திரி 2023 : முக்கியத்துவம்
மாத சிவராத்தியன்று திருமணமான பெண்கள் ஆரோக்கியம், நலம், நீண்ட ஆயுளை கணவருக்குத் தர வேண்டி விரதம் இருப்பார்கள். கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க விரதம் மேற்கொள்வர்.
மகா சிவராத்திரி வரலாறு:
தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார்.
இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார்.
எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.