அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்று மகாசிவராத்திரி. மாதந்தோறும் வரும் சதுர்த்தசி திதி சிவராத்திரியாக கருதப்பட்டாலும், மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதி மகாசிவராத்திரியாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது.
மகாசிவராத்திரி எப்போது?
மகாசிவராத்திரி நன்னாளில் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி இரவெல்லாம் கண்விழித்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பாண்டிற்கான சிவராத்திரி பிப்ரவரி 26ம் தேதியா? 27ம் தேதியா? என்று பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒருநாளில் சூரிய உதயத்தின்போது எந்த திதி உள்ளதோ அந்த நாள் முழுவதும் அந்த திதியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, 26ம் தேதி காலை 10.18 மணிக்கு சதுர்த்தசி திதி பிறக்கிறது. இந்த திதியான அடுத்தநாள் காலை பிப்ரவரி 29ம் தேதி காலை 9.01 மணி வரை உள்ளது. சூரிய உதய கணக்கில்படி பார்த்தால் வரும் பிப்ரவரி 27ம் தேதிதான் சிவராத்திரி கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
கண்விழிக்க வேண்டியது எந்த நாள்?
ஆனால், சிவராத்திரி என்றால் இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவபெருமானை வணங்கும் நாள் ஆகும். அதனால், சதுர்த்தசி திதி இருக்கும் பிப்ரவரி 26ம் தேதியே மகாசிவராத்திரி ஆகும். பக்தர்கள் வரும் பிப்ரவரி 26ம் தேதி இரவுதான் கண்விழித்து கோயில்களில் நடக்கும் நான்கு கால பூஜையில் பங்கேற்க வேண்டும்.
சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முதல் தீவிரமாக நடந்து வருகிறது.
சிவபெருமானுக்கு பிரதோஷம், கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம் ஆகிய நாட்களுக்கு நிகராக இநத மகாசிவராத்திரி நாள் உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையிலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், வடபழனி வேங்கீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.