திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதற்காகு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது. பக்தர்களின் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டோக்கன்களை வரிசையில் நின்று வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.


கடந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கிட்டத்தட்ட 30 மணிநேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை கும்பிட்ட செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி இணையதளங்களில் மிகப்பெரிய வைரலானது. இந்தநிலையில், வருகின்ற 24ம் தேதி தீபாவளியன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், அன்றைய தினம் விஐபி தரிசனம் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. சாதாரண மக்கள் ஏழுமலையானை தரிசிக்க வசதியாக முக்கிய தினங்களில் விஐபி தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் அவ்வபோது ரத்து செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், அக்டோபர் 24-ம் தேதி தீபாவளியன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாராதனை நடைபெறும் என்பதாலும், அக்டோபர் 25 ம் தேதி சூரிய கிரகணத்தையொட்டி, கோயில் காலை 8 மணி முதல் மாலை 7:30 மணி வரை மூடப்படும் என்பதாலும், இந்த 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 


மேலும், நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி கோயில் நடை காலை முதல் மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் மூடப்படும். அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனம், 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனம் மற்றும் வாணி அறக்கட்டளை தரிசனம் போன்றவை ரத்து செய்யப்படும் என்றும், அதன்படி பக்தர்கள் பயணத்தை திட்டமிடுமாறு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளது.


24ம் தேதி தீபாவளி ஆஸ்தானம், 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் ஆகிய காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) தெரிவித்துள்ளது.


டோக்கன் அடிப்படையில் தரிசனம்:


குறிப்பிட்ட நேரத்தில் டோக்கன் பெறும் பக்தர்கள் திருப்பதியில் தங்கி மலையேற வேண்டும். இந்த கொள்கை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரவு முதல் வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு விரைவு தரிசனம் அளிக்கும் வகையில் விஐபி பிரேக் தரிசனம் காலை 10.00 மணியாக மாற்றப்பட்டுள்ளது.