இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. இந்து மார்க்கத்தில் முழு முதற்கடவுளாக போற்றி வணங்கப்படுபவர் விநாயகப் பெருமான். எந்தவொரு நல்ல காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகரை வணங்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
விநாயகர் சதுர்த்தி எப்போது?
ஒவ்வொரு ஆவணி மாதமும் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாள் விநாயகர் அவதரித்த நாளாக விநாயகர் சதுர்த்தியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி இந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் யானை முகமும், மனித உடலுடனும் தோன்றி விநாயகப் பெருமான் கஜமுகாசுரனை அழித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. விநாயகப் பெருமான் தோன்றியது குறித்து பல புராணங்கள் இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி நன்னாளில் இந்தியா முழுவதும் வீடுகளில் விநாயகருக்கு படையலிட்டு வழிபாடு செய்வது வழக்கம்.
காவல்துறை கட்டுப்பாடு:
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு எங்கெங்கு சிலைகள் வைக்க வேண்டும்? எந்த வழியில் சிலைகளை கரைக்க எடுத்துச் செல்ல வேண்டும்? என்று காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், இந்த நகரங்களில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்படும் சிலைகள் ஒரு வார காலம் பக்தர்கள் தரிசனசத்திற்காக வைக்கப்பட்டு பின்னர் கரைக்கப்படும்.
ஏற்பாடுகள் தீவிரம்:
தமிழ்நாட்டில் வீடுதோறும் சிறுவர்களும், இளைஞர்களும் விநாயகர் சிலைகளை பாடல்கள் பாடிக்கொண்டே எடுத்து வருவதும் வழக்கமாக உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவை போன்ற பெருநகரங்களில் முக்கிய இடங்களில் சாதாரண சிலை முதல் மிகவும் பிரம்மாண்டமான உயரங்களில் விநாயகர் சிலைகள் பக்தர்கள் தரிசனத்திற்காக பல முக்கிய இடங்களில் வைக்கப்படும்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் என புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் களைகட்டும். இதனால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிலைகள் தயாரிப்பு, விற்பனை தீவிரம்:
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே உள்ள நிலையில், விநாயகர் சிலைகளின் தயாரிப்பும், விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. இதற்காக கடந்த இரு மாதங்களாகவே பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடந்து வந்தது. பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளுக்கான ஆர்டர்கள் கிடைத்ததால் பலரும் மும்முரமாக தயாரித்து வருகின்றனர்.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:
விநாயகர் சிலைகளை கரைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.