Vinayagar Chaturthi 2024: பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் - குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்
திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இளைஞர் குத்தாட்டம் போட்டனர்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைப்பெற்றது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகே ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். டிரோன் கேமராக்கள் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Just In
இளைஞர்கள் குத்தாட்டம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கல்லக்கடை மூளை, தண்டராம்பட்டு சாலை வழியாக தாமரை குளம் சென்றது. இந்த ஊர்வலம் செல்லும் போது இளைஞர்கள் பலர் ஆடி, பாடி ஆரவாரம் செய்தனர். மேளதாளம் முழங்க வாகனங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்றது. இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் விநாயகர் சிலைகளை வணங்கினர். தங்கள் வீடுகளில் வைத்து வணக்கப்பட்ட சிறிய அளவிலான சிலைகளை ஊர்வலத்தில் சென்ற வாகனத்தில் எடுத்து சென்று வைத்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை, சமூத்தர காலணி, தர்க்கா உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. அதன்படி தண்டராம்பட்டு சாலையில் உள்பட முக்கிய தெருக்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் தண்டராம்பட்டு சாலை ஊர்வலத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்டது. ஊர்வலம் செல்லும்போது பலர் வீடுகளின் மாடிகளில் நின்று வேடிக்கை பார்த்தனர். செல்போனில் படம் பிடித்தும், ஊர்வலம் சென்ற விநாயகர் சிலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஊர்வலத்தின் முன்னேயும், பின்னேயும் காவல்துறையினர் வாகனங்கள் சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக வந்த விநாயகரை தாமரை குளத்தில் கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது. இதையொட்டி நகரின் முக்கிய இடங்களிலும், ஊர்வல பாதைகளிலும் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தங்கள் விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் இளைஞர்கள் கலர் வண்ண பவுடர்களை ஒருவர் மேல் ஒருவர் பூசிக்கொண்டும் தாரை தப்பட்டைகளுடன் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டு தங்கள் விநாயகரை கொண்டு சென்று கரைத்தனர்.