விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையானகும். 19 அடி உயரத்தில், பத்து அடி அகலத்தில் 190 டன் எடை கொண்ட இந்த விநாயகர் சிலைக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு  அலங்காரங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. 11 விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, இறுதியாக சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.




காலை 7 மணி முதல் ஒரு மணி நேரம் பூக்களால் அலங்காரம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து விநாயகரை வழிபட்டனர். இதேபோல கோவையின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கோவை புறநகர் பகுதியில் 1611 விநாயகர் சிலைகள், மாநகர் பகுதிகளில் 680  விநாயகர் சிலைகள் உட்பட 2300 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர்  சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.


விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்


இந்து முஸ்லிம் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக இஸ்லாமியர்கள் விநாயகருக்கு சீர் கொண்டு வந்து கொடுத்த சம்பவம் பொள்ளாச்சியில் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரபலமான மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் தலைமையிலான இஸ்லாமியர்கள் பலர் ஒன்று சேர்ந்து பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலை ஆகியவற்றை சீர்வரிசையாக கொண்டு வந்து விநாயகருக்கு செலுத்தினர். அப்போது திமுகவினர் மற்றும் மாட்டு வியாபாரிகள் உள்ளிட்டோர் சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர்.




இதுகுறித்து சின்ன பள்ளிவாசல் நிர்வாகி உசேன் கூறுகையில், ”தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்துக்களும் முஸ்லீம்களும் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். பொள்ளாச்சியில் நடைபெறும் மாரியம்மன் பண்டிகை உள்ளிட்ட இந்துக்களின் நிகழ்ச்சிகளில் நாங்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்கிறோம். அதேபோல் பக்ரீத், ரம்ஜான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இந்து சகோதரர்களும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கின்றனர். மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாகவே இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க : Vinayagar Chaturthi: விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி.. தலைவர்கள் வாழ்த்து..!