எண்ணிய செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் மாற வணங்கப்படுபவர் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான். ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கோயில்களில் பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, பஞ்சாமிர்தம் என விநாயகருக்கு சிறஓஉ அபிஷேகங்கள் செய்து அலங்கரித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பிள்ளையார் உருவங்களை களி மண்ணால் பிடித்தும், சிலைகள் நிறுவியும், மோதகம், சுண்டல் அவல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து அவரை வணங்கி மக்கள் மகிழ்கின்றனர். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து:
இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்து மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்கள். விநாயக பெருமான் அனைவருக்கும் ஞானம், வலிமை, வெற்றி, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வழங்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. “ முழுமுதற் கடவுளாம், வினை தீர்க்கும் தெய்வமாம், ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், உளமார்ந்த விநாயகர்சதுர்த்தி வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வாழ்த்து:
அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், ”விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நன்னாளில் நம் எண்ணங்கள் நிரைவேற முழுமுதற்கடவுளை வணங்குவோம். நாடும், நாட்டு மக்களும் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருள்புரிய, அனைவருக்கும் விநாயகர்சதுர்த்தி வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.