விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கரூரில் 50-க்கு மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
இதில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்குபவர் மகா கணபதி, ஆண்டுதோறும் சதுர்த்தி விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கரூர் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியேட்டி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை வைத்து முக்கால பூஜை நடத்தி வழிபட்டனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அருகம்புல் மாலை எள்ளெருக்கு மாலை சாத்தி அவருக்கு பிடித்தமான அவுல் பொரிகடலை மற்றும் கொலுக்கட்டை வைத்து படையலிட்டு வழிபட்டனர். கரூர் மாநகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 51 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 51 சிலைகளும் கரூர் 80 அடி சாலையில் ஒருங்கிணைத்து அங்கிருந்து மேளதாளத்துடன் இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. கரூர் -கோவை சாலை, பேருந்து நிலையம் சாலை, ஜவகர் பஜார், ஐந்து ரோடு வழியாக சென்ற விநாயகர் ஊர்வலம் வாங்கல் காவிரி ஆற்றிற்கு சென்று விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்த ஊா்வலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள் என 250 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
லாலாபேட்டை அருகே மகிளிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் மாசற்ற விநாயகர் சிலை அலங்கரித்து தேரில் வைத்து ஊர்வலம் எடுத்து சென்று ஆற்றில் கரைத்து கொண்டாடினர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட மகிளிபட்டியில் விநாயகர் கோவில் அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாசற்ற முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதை தீர்மானித்து, பூக்கள் கொண்டு விநாயகர் சிலை வடிவமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள்.
பெரும்பாலான பகுதிகளில் விநாயகர் சிலைகள் களிமண் மூலம் சிலை வடிவமைத்து அதற்கு வர்ணங்கள் பூசி விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர். பின்னர் அதனை வாய்க்கால் மற்றும் ஆறுகளில் கரைப்பதால் தண்ணீர் மாசு அடைகிறது. வருங்கால இளைஞர்கள் மாசில்லா விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமாக பூக்களால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை மூலம் கொண்டாடுவதற்கு எடுத்துக்காட்டாக விளங்க மகிளிப்பட்டி இளைஞர்கள் மத்தியில் முடிவெடுக்கப்பட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டு விநாயர் கரகம் பலித்தல், திருத்தேர் ஊர்வலம், விநாயகர் கரகம் ஆற்றில் விடுதல் என மூன்று தினங்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.