விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வைகுண்ட வாச பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பதை பார்த்தால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என ஐதீகம். வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். அப்படி திறக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக சாமியை தரிசனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, விழுப்புரத்தில் உள்ள வைகுந்தவாச பெருமாள் கோயிலில், பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல், இன்று அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வைகுந்தவாச பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, கோவிந்தா முழக்கங்களுடன் பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர். இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் நள்ளிரவில் இருந்தே கோயில் வாசலில் காத்திருந்தனர். சொர்க்க வாசல் திறப்பைத் தொடர்ந்து, சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
கூட்டேரிப்பட்டு ஸ்ரீ ரங்கநாயகி சமேத பள்ளிகொண்ட பெருமாள் சன்னதியில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு :-விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள் சன்னதியில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு மூலவர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோ பூஜையுடன் விழா துவங்கியது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவமூர்த்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு மூலவர் வச்சீராங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலகிராமத்தில் அமைந்துள்ள ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. சொர்க்க வாசல் திறந்த உடன் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் உற்சவர் கருட வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து உற்சவர் வீதி உலா காட்சி நடைபெற்றது. மூலவர் வச்சீராங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணியிலிருந்து 'அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள்' நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே, பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு சீனிவாச பெருமாள் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று 2-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி காட்சி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோயில் மத்திய திருப்பதி என அழைக்கப்படுகிறது.