விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோயிலில் நாளை நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வைகுண்ட ஏகாதசி என்பது ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயணத்தில் நுழைவதற்கு முன்பு வரும் ஏகாதசி ஆகும். புராணங்களின்படி, விஷ்ணு மூர்த்தி கருட வாகனத்தில் மூன்று தெய்வங்களுடன் முல்லோகாலத்திலிருந்து பூலோகத்திற்குள் நுழைந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளிக்கிறார். அதனால்தான் இந்த ஏகாதசியை முக்கொடி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இவை அஷ்டாதச புராணங்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்த புனித நாளில் சொர்க்கத்திற்கான பாதை திறக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இந்த நாளில் விரதம் இருந்தால் ஆயிரக்கணக்கான வருட தவத்தின் பலன் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 13-ந் தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த லட்டு கமிட்டிக்குழுவினர் லட்டுகள் தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.
அதுபோல் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பணி விழுப்புரத்தில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இதற்காக சர்க்கரை, கடலை பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை கொண்டு லட்டுகள் தயார் செய்யும் பணியில் லட்டு கமிட்டிக்குழுவினர் மற்றும் சமையல் கலைஞர்கள் பலர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த லட்டுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டதும் நாளை பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.