தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அமாவாசை தினத்தன்று கேதார கௌரி நோன்பு எடுத்து பெண்கள் வழிபடுவது வழக்கம். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், கணவன், மனைவி இடையே ஒற்றுமை நிலவவும் கேதார கவுரி நோன்பு எடுத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர். அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான அமாவாசை தினமான இன்று பல்வேறு கோயில்களிலும் கேதார கௌரி நோன்பு எடுக்கும் வழிபாட்டில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த அமைச்சார் அம்மன் கோயிலில் கேதார கௌரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேங்காய், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், அதிரசம், நோன்பு கயிறு ஆகியவற்றை வைத்து படையலிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதேப்போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் நடைபெற்ற கேதார கவுரி நோன்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
கேதார கௌரி விரதம் கடைபிடிக்கும் முறை
கேதார கௌரி விரதம் கடைபிடிக்கும் முறை இந்த கேதார கௌரி விரதம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி கடைப்பிடிப்பார்கள். சில பேருக்கு இந்த நோன்பு கடைபிடிக்கும் பழக்கமே இருக்காது. உங்களுடைய வீட்டில் உங்க குல வழக்கப்படி நீங்கள் எப்படி நோன்பு வழிபாடு செய்வீர்களோ, அதை செய்து கொள்ளலாம். இந்த நோன்பு வழிபாட்டிற்கு வைக்கும் பொருட்களை எல்லாம், பூஜையில் வைக்கும் போது 21 என்ற கணக்கில் வைக்க வேண்டும் என்ற ஒரு வழக்கம் இருக்கும். வெற்றிலை பாக்கு, அதிரசம், வாழைப்பழம் இப்படி எது வைத்தாலும் அதை 21 என்ற கணக்கில் வைப்பார்கள். சில பேர் நோன்பு கயிறு, காதோலை கருகமணி, சீப்பு, கண்ணாடி இப்படிப்பட்ட பொருட்களை வைத்து வழிபாடு செய்யும் வழக்கமும் இருக்கிறது. சிலர் வீட்டிலேயே கலசம் நிறுத்தி தேங்காய் வைத்து அதை அம்மனாக பாவித்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு மேற்கொள்வார்கள். சிலர் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் அம்மனின் முன்பு நோன்பு தட்டை வைத்து வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு கொண்டு வந்து எளிமையாக வழிபாட்டை முடித்துக் கொள்வார்கள். அது அவரவர் வீட்டு வழக்கத்தை பொறுத்தது.
கணவருக்காக இந்த கேதார கௌரி விரதம் இருக்கலாம்
எங்களுக்கு நோன்பு எடுக்கும் பழக்கமே இல்லை. நாங்கள் விரதம் இருக்கலாமா என்று கேட்டால், நிச்சயமாக நோன்பு எடுக்கும் வழக்கம் இல்லாத குடும்பத்தில் இருக்கும் பெண்களும், தங்களுடைய கணவருக்காக இந்த கேதார கௌரி விரதம் இருக்கலாம். உங்களால் முடிந்தால் சாப்பிடாமல் விரதம் இருந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.ஆனால் உங்கள் குடும்ப வழக்கம் இல்லாமல் இப்படி நோன்பு தட்டு எடுப்பதற்கு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். அதனால் மனப்பூர்வமாக நீங்கள் விரதம் மட்டும் இருந்துவிட்டு, மாலை நேரம் எளிமையாக உங்கள் மனதிற்குள் மகாலட்சுமி தேவியை, சக்தி தேவியை, கௌரி தேவியை சிவபெருமானின் மனதில் நிறுத்தி விளக்கு ஏற்றி ஏதாவது ஒரு பிரசாதம் செய்து வைத்து, மனம் உருகி வழிபாடு செய்து கணவருக்காக பிரார்த்தனை செய்தாலும், நீங்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை பெறலாம்.