மயிலம் அருகேயுள்ள திருவக்கரை கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புனித நீர் தெளிக்க கோயில் நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். 


விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள திருவக்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடிவாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் திருக்கோயிலில் யாக சால பூஜைகள் கடந்த 8 ஆம் தேதிமுதல் செய்யப்பட்டு மேள, தாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் கோயில் கருவரை கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.


ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுர கலசங்கள், சந்திரமெளலீஸ்வரர் சன்னதி, வடிவாம்பிகை சன்னதி, வக்ர காளியம்மன் சன்னதி, வரதராஜ பெருமாள் சன்னதி, குண்டலி மாமுனிவர் சன்னதிகளின் விமானங்கள் ஆகியவற்றின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்சியர் மோகன் எஸ்பி ஸ்ரீநாதா ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் கும்பாபிஷேகத்தில் புனித நீர் தெளிப்பதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் பக்தர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.