விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் பழமைவாய்ந்த ராமாயண காலத்தில் வாலியால் பூஜிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த பெரியநாயகி சமேத வாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவர், ராஜராஜ சோழர், விஜயவர்மன் மற்றும் சம்புவராயர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட இக்கோவிலில் சிவபெருமான் மேற்கு நோக்கியவாறு அமைந்திருப்பார். இக்கோவில் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு அடுத்தபடியாக சிறப்பான கோவிலாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வாலிஸ்வரர் திருக்கோவில் கடந்த 200 ஆண்டுகளுக்கு பிறகு புனரமைப்பு திருப்பணிகள் மேற்கொள்ளபட்டன.
புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கடந்த 29ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கோ பூஜை, மகா கணபதி,மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களும், தீபாரதனையும் நடைபெற்று 31ம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று நான்காம் கால யாக பூஜையும், விசேஷ திரவிய ஹோமங்களும், தீபாரதனையும் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் திமுக எம் எல் ஏ லட்சுமணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சனிதோஷ பரிகார தலம்
கிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களைத் துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராமி, மகேசுவரி, கவுமாரி, வைணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். சப்தகன்னியர் எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.
இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், பூலோகத்தில் இத்தலத்தில் தன்னை வழிபட்டு வர, குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாக கூறினார். மேலும், அவர்களது பாதுகாப்பிற்காக, தனது அம்சமான வீரபத்திரரையும் அனுப்பி வைத்தார். சிவன் அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, கன்னியர் குரு என்று அழைக்கிறார்கள் . சிவாலயமான இங்கு பெரியநாயகி அம்பாளுடன் சிவன் காட்சி தருகிறார். வாலி தன் தம்பி மனைவியை அபகரித்த தோஷம் நீங்க வழிபட்டதால், சுவாமிக்கு,வாலீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.
பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள்.