ஆலகிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோயில்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள புகழ்பெற்ற மயிலம் முருகப்பெருமான் ஆலயத்திற்கு மேற்குதிசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலகிராமம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
எமதண்டீஸ்வரர் ஆலயத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு
எமன் பயம் நீக்கும் திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் ஆலயத்தில் சூரியன் மூலவர் எமதண்டீஸ்வரரை வணங்கிய அற்புத நிகழ்வு இன்று காலை நிகழ்ந்தது. இந்த ஆலயத்தில் சூரிய பகவான் மற்றும் அவரது மகன்களான எமதர்மர், சனீஸ்வரர் ஆகியோர் தரிசித்துள்ளதாக கோவில் வரலாறு கூறுகிறது. இன்று காலை 5.55 மணிக்கு சூரிய உதயம் ஏற்பட்ட நிலையில் காலை 6 மணி முதல் 6.11 மணி வரை சூரிய பகவான் எமதண்டீஸ்வரரை தரிசித்த நிகழ்வானது ஏற்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சூரிய பகவான் எமதர்மன் சனீஸ்வர பகவான் ஆகிய மூன்று பேரும் மூலவர் எமதண்டீஸ்வரரை தரிசித்ததால் இந்த தளவானது சகலதோஷங்களும் நேர்த்தியாகும் தமிழ்நாட்டின் ஒரே கோயிலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் சிற்பம்
இக்கிராமத்தில் பல்லவர்காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்கு முன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது, இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள். ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோயிலில்,வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் சிற்பம் உள்ளது. தமிழகத்தில் உள்ள விநாயகா் சிற்பங்களில் இதுவே காலத்தால் முந்தையது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.
திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் என்ற நீண்ட ஆயுளை வழங்கும் பரிகார ஸ்தலம் உள்ளது. 15௦௦ ஆண்டுகள் மிகவும் பழமையான இந்த சிவன் கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் புதிதாக வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் மிகவும் தொன்மையான பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது இது இந்திய வரலாற்றுக்கு புதிய வரவாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எமனுக்கு தோஷம் நீக்கிய சிவன்
இக்கோயில் எமனுக்கு தோஷம் நீக்கிய சிவன் எமதண்டீஸ்வரர் என்று பெயர் கொண்டுள்ளார். எமனுக்கு தோஷம் நீக்கிய ஸ்தலமாகவும் சனீஸ்வரர் வணங்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. பிரதோஷ காலங்களில் நந்தி சுவாசிப்பதை இங்கு உணரமுடிகிறது என்பது தனி சிறப்பு. சுவாமி இடப்பக்கமும் அம்பாள் வலப்பக்கமும் மையமாக ஜீவ சமாதி அமைந்துள்ளது. அம்பாள் ஏழு நாட்களுக்கும் ஏழு வேறுபட்ட முகங்களில் காட்சி தருகிறார். படர்ந்து விரிந்த ஆலமரத்தின் கீழே ஆண், பெண் நாக தேவதைகள் காட்சி தருகிறார்கள். எம தோஷம் நீக்கும் திருக்குளத்தின் நடுவே கங்கா தேவி தோஷம் நீக்கும் பொருட்டு காட்சி தருகிறார்.
அம்பாள் கருணையையும் சுவாமியின் அருளையையும் பெறவேண்டி நம் காஞ்சி மாமுனிவர் மகாபெரியவர்கள் இந்த ஸ்தலத்தில் 1943, 1952, 1966, 1969, 1972 ஆம் ஆண்டுகளில் வருகை தந்து வழிபட்டுள்ளனர் என்று எனக்கு இவர்கள் தெரியப்படுத்தியது கூடுதல் சிறப்பு. நாமும் ஒருமுறை இந்த வழமையான ஆலயத்திற்கு விஜயம் செய்து இறைவன் அருளைப் பெறலாம்