இன்று மாலை  வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக பேராலயத்திற்குகு வந்த வண்ணம் உள்ளனர்.

 

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெறுகிறது. பின்னர் 8ஆம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடையவுள்ளது. திருவிழா காலங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று கொடியேற்ற விழாவில் மட்டும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது

கொடியேற்ற விழாவிற்கு பங்கேற்பதற்காக சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பாதை யாத்திரையாகவும் பேருந்து மற்றும் ரயில் மூலமாகவும் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

 

இன்று மாலை சுமார் 5: 45 மணியளவில் கொடி ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை ஆரிய நாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும் கொடி ஊர்வலம் பேராலய முகப்பிற்கு வந்தவுடன் தஞ்சை மறை மாவட்ட ஆயர்  தேவதாஸ் ஆம்புரோஸ் அவர்களால் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்கின்றி எளிமையாக நடைபெற்றதால் இந்த ஆண்டு லட்சக்கணக்கான லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும்,  நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் நாகை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களை சேர்ந்த ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்த சுமார் 1800 காவலர்களும், 200 ஊர்காவல்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும். பொதுமக்களை கண்காணிக்க உயர் கண்காணிப்பு கோபுரம் (Watch Tower) 27. மற்றும் 04 ஆளில்லா விமானம் ( Drone Camera) மேலும் பேராலயத்தை சுற்றி பேராலயத்தின் சார்பாக 700 மற்றும் காவல்துறையின் சார்பில் 60 கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் மேலும் வேளாங்கண்ணி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருட்கள் வாங்க வாகனங்களை காலை 04 மணி முதல் 06 மணி வரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.