திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன், பொன்னர் - சங்கர், நல்லதங்காள், மகாமுனி போன்ற பரிவார தெய்வங்கள் அமைந்துள்ள கன்னிமாரம்மன் கோவில் மாசி மாதப் பெருந்திருவிழா கடந்த 20 ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் துவங்கியது. இந்நிலையில் 8 ம் திருவிழாவின் பிராதன நிகழ்ச்சியான வேடபரி நேற்று மாலை வெகு விமர்சையாக நடந்தது.  அப்போது கன்னிமாரம்மன் கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தாரர்களுமான பொன்னழகேசன், தரணீஸ், அசோக்குமார், சவுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் பெரிய காண்டியம்மன் பரம்பரை அர்ச்சகர் ரமேஷ், வீ.பூசாரிபட்டி ஊர் நான்குகரை பட்டயதாரர்கள், கன்னிமாரம்மன் கோவில் வகையறா, பட்டியூர் கிராம முக்கியஸ்தர்கள், சோம்பாசிகள் மற்றும் பரிசாளங்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பெரியகாண்டியம்மன், பொன்னர் மற்றும் தங்காள் கிரகத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து வர,  குதிரை வாகனத்தை பட்டியூர் கிராமங்களின் ஊராளிக்கவுண்டர் சமூக இளைஞர்கள் சுமந்து வந்தனர். அதேபோல யானை வாகனத்தில் பெரிய காண்டியம்மன் அமர்ந்து வர, காட்டையாம்பட்டி கொடிக்கால்காரர்கள் வகையறா, இளைஞர்கள் சுமந்து வர அதைத்தொடர்ந்து வேட்டைப்பூசாரி தங்காள் கரகம் சுமந்து கோவில் முன்பிருந்து வேடபரி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டது.




இதனை தொடர்ந்து சாம்புவன் காளையில் அமர்ந்து முரசு கொட்டி முன் செல்ல, பின்தொடர்ந்து குதிரை வாகனமும், யானை வாகனமும், தங்காள் கரகமும் ஒன்றன் பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் வேடபரி சென்றது. தொடர்ந்து வேடபரி அணியாப்பூர் செல்லும் வழியில் உள்ள இளைப்பாறி மண்டபத்தில் யானை வாகனமும், தங்காள் கரகமும் நின்றுகொள்ள,  குதிரை வாகனத்தில் சென்ற பொன்னர் அணியாப்பூரில் உள்ள குதிரை கோவிலில் அம்பு போட்டு விட்டு இளைப்பாறி மண்டபம் திரும்பினார். இதனையடுத்து அதிகாலை வரை இளைப்பாற்றி மண்டபத்தில் அமர்ந்திருந்த பெரியகாண்டியம்மன், பொன்னர், தங்காள் கரகத்தை பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பெரியகாண்டியம்மன் பூ பல்லக்கிலும், பொன்னர் குதிரை வாகனத்திலும், தங்காள் கரகம் யானை வாகனத்திலும் மீண்டும் வீரப்பூர் கோவிலை வந்தடைந்ததும், சிறப்பு வழிபாடு நடந்தன. கன்னிமாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டிஐஜி சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில்,  எஸ்பி சுஜித்குமார் தலைமையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாசி பெருந்திருவிழாவின் 9 ம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை வீரப்பூர் கோவில் முன்பிருந்து பெரியகாண்டியம்மன் பெரிய தேரோட்டம் நடைபெறுகிறது.




பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் கிளி வேட்டை :


 திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, “பொன்னர் – சங்கர் மன்னர்களின் பெற்றோர்கள் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் தங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க, வீரமலை பகுதிக்கு சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு” பொன்னிவளநாட்டில்  நடைபெற்றது. பொன்னர் – சங்கர் அடுத்தடுத்த ஏழு வனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக கிளியை தேடி கிளி அங்கு இல்லாததால் வனங்களை துவம்சம் செய்துவிட்டு இறுதியில் ஆலமரத்தில் கிளியை கண்டுபிடித்து அதை பக்தர்களிடம் காட்டியபோது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அந்த கிளியை தங்கையிடம் ஒப்படைக்கிறார் பொன்னர். இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.