108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் முக்கிய விழாவான  வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து - ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. டிசம்பர் 23ம்தேதி முதல் 01ஆம் தேதி வரை பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதேபோல கடந்த 02ஆம் தேதி முதல் 12-ம் தேதி நேற்றுவரை ராப்பத்து விழாவில் பத்து நாட்கள் திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு  02ம் தேதி அதிகாலை 4.45மணிக்கு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் நடைபெற்றது.




தீர்த்தவாரி:


ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தார். அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைந்தார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெற்றது.




நம்மாழ்வார் மோட்சம்:


இதனை தொடர்ந்து 21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெற்றது. அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணி வரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.  அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (வெள்ளிக்கிழமை) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.