இந்து மதத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பல முக்கிய விசேஷ தினங்கள் வரும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சில மாதங்கள் ஆன்மிக மாதங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானவைகளில் ஒன்று தான் மார்கழி.
பெருமாளுக்குரிய மார்கழி மாதம்
டிசம்பர் 16ம் தேதி தொடங்கி ஜனவரி 13 அல்லது 14ம் தேதி வரை தொடரும் இந்த மார்கழி மாதம் மிகவும் சிறப்புகள் வாய்ந்தது. இந்த மாதத்தில் தான் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி என பெருமாளுக்குரிய விசேஷ தினங்களாக வரும்.
வைணவ சமயத்தினரால் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அன்றைய நாளில் உணவு உண்ணாமல், இரவு தூங்காமல் விழித்திருந்து பாராயணம் செய்து பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
2025 வைகுண்ட ஏகாதசி எப்போது?
2025ம் ஆண்டு மார்கழி மாதம் டிசம்பர் 16ம் தேதி பிறந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 19ம் தேதியான இன்று அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இதிலிருந்து 11ம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. அதன்படி 2025 வைகுண்ட ஏகாதசி பண்டிகை டிசம்பர் 30ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. பெருமாளுக்குரிய விசேஷ தலங்களாக கருதப்படும் ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற கோயில்களில் இப்பண்டிகை வெகுவிமரிசையாக ராப்பத்து, பகல்பத்து உற்சவம் என கொண்டாடப்படுகிறது.
இந்த பிறவியில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அடுத்த பிறப்பு - இறப்பு இல்லாத மோட்ச நிலையை தரக்கூடிய விரதம் என்பதால் இதனை சைவ சமயத்தாரும் கடைபிடிக்கிறார்கள். இந்த திதியானது டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 1.34 மணிக்கு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பரணி நட்சத்திரமும் வருகிறது. எம தர்ம ராஜாவை அடிப்படையாக கொண்ட இந்த நட்சத்திரம் நம் மரணத்தையும் தள்ளிப்போட செய்யும் அளவுக்கு உகந்ததாக நம்பப்படுகிறது.
மாதம் தோறும் ஏகாதசி திதி வந்தாலும் மார்கழி மாதம் வருவது இன்னும் சிறப்பாகும். மற்ற விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதம் மிகவும் பவர் ஃபுல்லானது. இந்நாளில் நாம் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் நாம் நினைத்தது அனைத்தும் வெற்றிக்கரமாக ஈடேறும் என்பது நம்பிக்கையாகும். இந்த ஏகாதசி விரதமானது ஏகாதசி திதியில் தொடங்கி துவாதசி திதியில் நிறைவு செய்வதாகும்.
மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறையில் இந்த திதி வரும்போது விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டும் இருந்தால் போதும். அனைத்து விதமான பலன்களும், வெற்றிகளும் கைகூடி வரும் என்பது ஐதீகமாகும்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)