வைகுண்ட ஏகாதசி அன்று, நள்ளிரவு கண் விழித்து திருமால் கோயிலுக்கு சென்று வந்தால், வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பல்வேறு பெருமாள் கோயில்கள் இருந்தாலும், ஒரு சில பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெறும்.


நடப்பாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி வரும் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் வைகுண்ட ஏகாதசி விமர்சையாக நடைபெறும் கோயில்கள் குறித்து தெரிந்து கொள்வோம். 


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் - Arulmigu Sri Parthasarathyswamy Temple


108 திவ்ய தேசங்களில் ஒன்றான சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் அதிகாலை 4:30 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான தரிசன கட்டணம் ரூ.500 என்று, இந்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.


திருவடிசூலம் ஸ்ரீவாரு வெங்கடேச பெருமாள் கோயில் - Arulmigu Sri Vaaru Venkatesa Perumal Temple


செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீ வாருவெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். திருவடி சூலத்தில் ஏழுமலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள 108 திவ்ய தேசங்களில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சன்னதியில் சொர்க்க வாசல் திறப்பு விமர்சியாக நடைபெறும். 


மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில், பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படும். சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருப்பதால், வாய்ப்பிருப்பவர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேரில் காணலாம்.


ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் ‌கோயில் - Arulmigu Ennai Petra Thayaar samedha Bhaktavatsala Perumal Temple


திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் அமைந்துள்ள ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தளத்தில் 58 வது ஆலயமாகும். இங்கு இன்று வைகுண்ட ஏகாதேசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 


இக்கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. பக்தவச்சல பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக உள்ளது. இக்கோவிலிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொள்வார்கள். 


காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் - Divyadesam Sri Ashtabujakara Perumal Temple


கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில், காஞ்சியில் பிரசித்தி பெற்ற 44வது திவ்ய தேசமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் ரங்கசாமி குளம் அருகே அமைந்துள்ளது.


காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும் கோயிலாக இந்த கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற, இந்தக் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்வார்கள். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும். 5 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு நடைபெறுவது கூடுதல் சிறப்பாக உள்ளது.


காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் (Vaikunta Perumal Temple)


காஞ்சிபுரம் வைகுண்ட ராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. இங்கு முதல் மாடியில் தனியாக பரமப்பத வாசல் என உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த வாசல் திறக்கப்படும். எனவே பிற கோயில்களை காட்டிலும் இந்தக் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கோயில் புனரமைப்பு நடைபெறுவதால், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


சிங்கப்பெருமாள் கோயில் Sri Pataladhri Narasimhar Thirukovil (Pataladhripuram)


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். ஆனால் அவை எல்லாவற்றையும் விட, மார்கழி மாதத்தில் 20 நாட்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது.


வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் எழுந்தருளி, அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறும். சென்னை புறநகர் பகுதியில் இருப்பவர்கள் எளிதில் சென்று வரக்கூடிய கோயிலாக இந்த கோயில் உள்ளது. 


இதுபோக பல்வேறு பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வயதானவர்கள் உடல்நிலை கருத்தில் கொண்டு கோயிலுக்கு நேராக செல்ல முடியவில்லை என்றாலும், வீட்டில் இருந்தபடியே மனம் உருகி பெருமாளை வணங்கினால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.