தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே ஆன்மீகத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். அந்த வகையில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். வைணவ சமயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகவும் இந்த மார்கழி மாதம் உள்ளது.
வைகுண்ட ஏகாதசி:
இந்த மார்கழி மாதத்திலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது வைகுண்ட ஏகாதசி ஆகும். வைகுண்ட ஏகாதசி பிறக்கும் நாளின் முந்தைய இரவு முழுவதும் விழித்திருந்து வைகுண்ட ஏகாதசி பிறக்கும் அந்த அதிகாலையில் சொர்க்கவாசலை தரிசனம் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும். இதனால், வைகுண்ட ஏகாதசி 30ம் தேதி பிறக்க உள்ள நிலையில், 29ம் தேதி இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து தரிசனம் செய்வார்கள்.
வைகுண்ட ஏகாதசிக்கு செல்வதற்கு தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்:
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகிலே மிகவும் புகழ்பெற்ற வைணவ தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாளை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிவார்கள்.
2.வரதராஜ பெருமாள் கோயில் ( காஞ்சிபுரம்)
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் புகழ்பெற்ற வைணவ தலம் ஆகும். அத்திவரதர் அருளும் இந்த வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மிகவும் பழமையான கோயில் ஆகும்.
3. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்( விருதுநகர்)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிக மிக புகழ்பெற்றது. தமிழக அரசின் முத்திரையில் இந்த கோயிலே இடம்பெற்றுள்ளது. ஆண்டாளின் திருப்பாவையே மார்கழிக்கே தனிச்சிறப்பை அளிக்கிறது. இதனால், இங்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
4. கள்ளழகர் கோயில்( மதுரை):
மதுரையில் அமைந்துள்ள கள்ளழகர் கோயில் மிகவும் புகழ்பெற்ற ஆலயம். மதுரையின் அடையாளமான சித்திரைத் திருவிழாவிற்கு முக்கியமான இந்த கள்ளழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஆயிரக்கணக்கில் குவிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
5. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் ( சென்னை):
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. வைணவ தலங்களில் மிகவும் புகழ்பெற்ற இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து சொர்க்கவாசல் திறப்பில் வழிபடுவது வழக்கம். சென்னையின் பழமையான கோயில் இதுவாகும்.
6. சாரங்கபாணி திருக்கோயில் ( கும்பகோணம்):
கோயில் நகரமான கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி திருக்கோயில் வைணவ தலங்களில் முக்கியமான கோயில் ஆகும். இங்கு சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகிறது.
7. உலகளந்த பெருமாள் கோயில் ( காஞ்சிபுரம்):
பெருமாளின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை குறிக்கும் வகையில் உருவாகிய திருக்கோயில் இந்த உலகளந்த பெருமாள் கோயில். காஞ்சிபுரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்று இந்த உலகளந்த பெருமாள் கோயில். வைகுண்ட ஏகாதசி வழிபாட்டிற்கு செல்வதற்கு மிகவும் உகந்த கோயில்.
8. கூடலழகர் கோயில் ( மதுரை):
மதுரையில் அமைந்துள்ள கூடலழகர் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது இந்த பழமையான கூடலழகர் கோயில்.
மேலே கூறிய கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற வைணவ தலங்கள் ஆகும். இந்த கோயில்களுக்குச் சென்று வைகுண்ட ஏகாதசியில் சாமி தரிசனம் செய்வதும், சொர்க்க வாசலைத் திறப்பை தரிசிப்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலே கூறிய வைணவ தலங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள சைவ மற்றும் பிற கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி நாளில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும்.