திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷம், முகூர்த்தம் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
ஒவ்வொரு விசேச நாட்களிலும் பழனி முருகன் கோயிலில் மட்டுமல்லாமல் உப கோயில்களான பழனி மலையடிவாரத்தில் உள்ள பெரிய நாயகி சன்னதி, விநாயகர் கோயில் என மலையடிவாரத்தில் உள்ள கோயில் ஸ்தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் இன்று அதிகாலை பரமபதவாசல் வாசல் திறக்கப்பட்டது. பழனியில் உள்ள அருள்மிகு இலஷ்மிநாராயண பெருமாள் கோவில் மற்றும் அகோபில வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்பட்ட பரமபதவாசல் வழியாக, லஷ்மிநாராயண பெருமாள் மற்றும் லட்சுமி தாயார் வருகை தந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் பாலித்தனர்.
சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தரிசனம் செய்தனர். அதேபோல பழனிய அடுத்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டு அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமிதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.