காஞ்சிபுரம் (Kanchipuram): வைகாசி விசாகம் என்பது  தமிழ்க்கடவுளாம் முருகப் பெருமானின்  அவதாரம் செய்த நாளே வைகாசி விசாகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியது. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும். முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில் ( kanchipuram kumarakottam temple )

 

தமிழ்நாடு முழுவதும் அனைத்தும் முருகன் திருத்தலங்களிலும் இன்று வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், என அழைக்கப்படும் குமரக்கோட்டத்தில், அதிகாலை முதலே பக்தர்கள் வைகாசி விசாகப் பெருவிழா ஒட்டி முருகப்பெருமானை தரிசித்து அருள் பெற்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில் 108 பால்குடம் அபிஷேகம் விழா கட்சபேசஸ்வரர் கோயிலில் இருந்து துவங்கி மேளதாளம் முழங்க குமரக்கோட்டம் திருக்கோயிலை வலம் வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

 

இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அரோகரா அரோகரா என கோஷங்கள் எழுப்பியவாறு திருக்கோயிலில் வலம் வந்து பாலாபிஷேகம் நிகழ்வைக் கண்டு முருகன் அருள் பெற்றனர். கலந்து கொண்ட  அனைவருக்கும் முருகன் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் வைகாசி விசாக பெருவாய் ஒட்டி திருக்கோயிலில் பக்தர்கள் புளியோதரை , கேசரி,  சர்க்கரை பொங்கல், உள்ளிட்டவைகளை அன்னதானம் அளித்தனர். நிகழ்ச்சியில் தொண்டை மண்டல வேளாளர் சங்க மாநிலத் தலைவர் எல்லப்பன், மாநில ஆலோசகர் கணேசன், மாநில பொருளாளர் மனோகரன், மாநில பொதுச் செயலாளர் பூபதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.