வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்- சனீஸ்வரபகவான் ஆலய தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

 


காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்- சனீஸ்வரபகவான் தேவஸ்தானம் அமைந்துள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் அபயஹஸ்த முத்திரையுடன் நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வரபகவான் இங்கு தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். இதனால் சனிதோஷம் நீங்க வேண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

 

புகழ்பெற்ற இத்தேவஸ்தானத்தின் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பல்வேறு விதமான அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. நாள்தோறும் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக இரவு தியாகேசப்பெருமான் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.  காலை தேர்களுக்கு விஷேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. 



 

பின்னர்  குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணகுமார், திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சிவா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தினை தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறார்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் “நள்ளாறா, தியாகேசா” என சரண கோஷமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.



 

விநாயகர், முருகன், தியாகராஜர், நீலோத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் என அலங்கரிப்பட்ட ஐந்து தேர்களும் திருநள்ளாறின் முக்கிய வீதியில் வலம் வந்து கொண்டுள்ளன. தேரான வீதிகளில் ஆடி அசைந்து வரும் அழகை கண்டு பக்தர் ஆராவாரம் செய்கின்றனர். தேர்கள் இன்று மாலைக்குள் நிலைக்கு வரும். நிகழ்ச்சிகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பதால் விரிவான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்று நடைபெற்று வரும் திருத்துறை வட்டத்தை முன்னிட்டு இன்று திருநள்ளார் நகரப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண