உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசை அன்று, மயானக்கொள்ளை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு, மஹாசிவராத்திரியான நேற்று முன்தினம் துவங்கியது.

 



அன்று, பூங்கரகம், சக்திகரகம், அக்னிகரகம் ஏந்தி, வாத்திய இசைகளுடன் புஷ்ப விமானத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. மயான கொள்ளை உற்சவமான நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. மலர் அலங்காரத்திலும், சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய அம்மன், உத்திரமேரூர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். பக்தர்கள் அலகு குத்தி, டிராக்டர், லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரங்களில் அந்தரத்தில் தொங்கி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த மயான கொள்ளை விழாவால், உத்திரமேரூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.



 

ஏராளமானோர் இந்த மயான கொள்ளைகள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர். அதேபோல் உத்தரமேரூர் மயான கொள்ளையில் சிவன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் ராயல் என்ஃபீல்டு புல்லட் வண்டியில் செல்வதுபோல் வித்யாசமான முறையில் அலங்காரம் செய்திருந்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.  சிவன் பார்வதியை புல்லட்டில் அழைத்துச் செல்லும்போல் அமைக்கப்பட்டிருந்த அலங்காரம் பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றிருந்தது, தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்திலும் வைரலாக பரவி வருகிறது.