சமயபுரம் மாரியம்மன் கோவில் இதிகாச, புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரிய இக்கோவில் வருவாயில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள் பாலித்து வரும் அம்பாளின் அழகே தெய்வீகமானது. எட்டு கைகளுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை கண்டால் மனம் அமைதி அடையும் என்பர். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 6.30 மணிக்குமேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதேபோல ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். தொடர்ந்து ஒவ்வொருநாளும் இரவு 8 மணிக்கு சிம்மவாகனம், பூதவாகனம், அன்ன வாகனம், ரிஷபவாகனம், யானைவாகனம், சேஷ வாகனம், மரகுதிரைவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இதனை தொடர்ந்து வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்