நாகை அருகே காருகுடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமி சிறப்பு யாக பூஜையில், கிடுகிடுவென உயர்ந்து வரும் தக்காளி விலை குறைய வேண்டி அம்மனுக்கு 508 தக்காளி கொண்டு மாலை அணிவித்து நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனை பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருக்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவை பெற வேண்டி சிறப்பு பரிகார பூஜைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், தற்பொழுது வரலாறு காணாத அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்து வரும் தக்காளி விலையால் அடித்தட்டு ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையி ல் தக்காளியின் விலை குறைய வேண்டி, அம்மனுக்கும், மதுரை வீரனுக்கும் தனித்தனியே 508 தக்காளிகள் கொண்டு மாலை அணிவித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. மலர் மாலை, எலுமிச்சை பழம் மாலை உடன் சேர்த்து தக்காளியையும் மாலையாக அணிவித்த நிகழ்வு பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததோடு தக்காளியின் விலை உச்சம் தொட்டதையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்து உள்ளது.
அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்பட்ட தக்காளி நாளை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்