கடந்த வாரம் முதல் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி பண்டிகை முடிவுக்கு வரும் நிலையில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகை என்பது 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு வணங்குவர். ஒரு மனிதனுக்கு கல்வி, செல்வம், ஞானம் ஆகிய மூன்றும் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படும் நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வழிபடுவதற்காக பூஜை பொருட்களை வாங்க சந்தைக்கு குவிந்துள்ளனர். முக்கியமாக இன்று வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொட்டு வைத்து பூஜை செய்வார்கள். சாமிக்கு நெய்வேத்தியமாக பொரி, கடலை, அவல், பழங்கள், வடை, பாயாசம், ஆகியவற்றை வைத்து வழிபடுவார்கள். ஆயுத பூஜை முன்னிட்டு நேற்று முதல் விற்பனை களைக்கட்டியுள்ளது. பூஜை நாட்கள் என்பதால் பழங்கள், வாழை கன்றுகள், தோரணங்கள் மற்றும் பூக்களின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
இன்று முக்கியமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அதாவது அன்றாட நமக்கு பயன்படும் பொருட்களை நன்கு சுத்தம் செய்து பொட்டு வைத்து வழிபடுவார்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சுத்தமாக கழுவி மாலை அணிவித்து அதற்கு பூஜை செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் வாகனத்தில் எந்த பழுதும் ஏற்படாமல், விபத்துக்குள்ளாகாமல் இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் இன்று புத்தகங்கள், பேனா ஆகியவற்றை வைத்து வழிப்படுவார்கள். இப்படி புத்தகங்களை வைத்து வழிப்படுவதன் மூலம் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று பூஜையில் வைக்கும் புத்தகங்களை நாளை விஜய தசமி அன்று எடுத்து படிக்கும் போது பிள்ளைகளுக்கு கல்வி ஞானம் பெருகும் என்பது ஐதீகம். அதேபோல் சிறு குழந்தைகள் அதாவது 2 அல்லது மூன்று வயது குழந்தைகளுக்கு நாளை கோயில்களில் வித்யாரம்பம் நடத்தப்படும். அதாவது முதன் முதலில் படிப்பை தொடங்கும் வகையில் கோயில்களில் கடவுளின் ஆசியுடன் நெற்பயிரில் தமிழின் முதல் எழுத்தான அ எழுதப்படும். அப்படி நாளை கல்வி தொடங்குவதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என சொல்லப்படுகிறது.
இப்படி ஆயுத பூஜை/ சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையில் வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படை எடுத்துள்ளனர். அதாவது 21 மற்றும் 22 (சனி மற்றும் ஞாயிறு) ஏற்கனவே விடுமுறை நாள் என்பதால் இன்றும் நாளையும் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை முதலே மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.