திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா வரும் ஏப்ரல் மாதம் 1ந் தேதி நடைபெறுவதையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 


திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே  மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழா வரும் ஏப்ரல் மாதம் 1ந் தேதி நடைபெறுவதையொட்டி இதற்கான பந்தல்கால் முகூர்த்தமானது கடந்த மாதம் (பிப்ரவரி) 5ந் தேதி நடைபெற்றது. 



 

அதன்பின்னர் கொடியேற்றம் நிகழ்ச்சியானது நடைபெற்று ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் புகழ் பெற்ற ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம்,வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும்,3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத  இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும். 



 

தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு  விமானம் வரையில் 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6 அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடிஅசைந்தாடியபடி ஆரூரா தியாகேசா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க ஆழித்தேர் நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளா காட்சியாகும். 3வது முறையாக ஆயில்ய நட்சத்திரத்தில் ஓடும் ஆழித்தேர்.

திருவாரூர் ஆழித்தேர் என்பது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேரோகும். ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்த இந்த ஆழித்தேரோட்டம் கடந்த 1927ம் ஆண்டு தேரோட்டத்தின் போது ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தேர் முற்றிலுமாக எரிந்தது. பின்னர் 1930ல் புதிய தேர் உருவாக்கப்பட்டு 1948 வரையில் நடைபெற்ற நிலையில் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த தேரோட்டம் என்பது முற்றிலுமாக தடைப்பட்டது. அதன்பின்னர் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் பெரும் முயற்சி காரணமாக 1970ல் முதல்வர் பொறுப்பேற்ற மறைந்த கருணாநிதி 22 ஆண்டு காலமாக ஓடாத தேரை ஓட்டி காண்பித்தார். பின்னர் தொடர்ந்து இந்த தேரோட்டமானது நடைபெற்றாலும் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி கடந்த 1990, 91 மற்றும் 1993ம் ஆண்டுகளில் இதுபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த ஆழித்தேரோட்ட விழா நடைபெற்று வரும் நிலையில் 3வது முறையாக நடப்பாண்டில் வரும் ஏப்ரல் மாதம் 1ந் தேதி பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த ஆழித்தேரோட்டம் நடைபெறுவது குறிப்பிடதக்கது.