karthigai deepam 2024 (கார்த்திகை தீபம் 2024): திருவண்ணாமலை மலை பஞ்சபூத ஸ்தலங்களில் மிக முக்கிய ஸ்தலமாகவும் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும், திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபத் திருவிழாவின் போது உற்சவர் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேசுவரருக்கு சாற்றுவதற்காக, காஞ்சிபுரத்திலிருந்து அலங்கார மாலைகள் கடந்த 164 ஆண்டுகளாக தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து செல்லும் மாலை Karthigai Deepam 2024
ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழா கார்த்திகை மாத பௌர்ணமியன்று நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும் போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில், உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்து அம்மாலைகளே சாற்றப்படுகின்றது.
இந்த அலங்கார மாலைகளை திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஜவுளி வியாபாரிகள் சத்திரத்தில் நடைபெற்றது. குத்து விளக்கேற்றி வைத்தும், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலங்கார மாலைகளுக்கு தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் இந்த மாலைகள் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
164 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத்திற்கு, தொடர்ந்து 164 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிபுரம் ஜவுளிக்கடை சத்திரத்திரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மாலைகளை வழங்கி வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் மாலைகள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் மாலையின் உயரம் 7 அடியாகும். இதை மரக்கா ( பாரம்பரிய பெயர்) மாலைகள் என்பார்கள். இம்மாலைகளின் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு லட்சமாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது ஜவுளி வியாபாரிகள் சங்க செயலாளர் பி.மாணிக்கவேல் உட்பட சங்க நிர்வாகிகள், மேலாளர் உட்பட பலரும் உடன் இருந்தனர். 164 ஆண்டுகளாக இந்த மாலை அனுப்பும் விழாவானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது, இந்த மாலையினை பார்ப்பதற்காக ஏராளமான அப்பகுதியில் குவிந்து மாலையை தரிசித்து விட்டு சென்றனர்.
Thiruvannamalai Deepam திருவண்ணாமலை மகா தீபம் :
இன்று கார்த்திகை தீபம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை பாதிக்கப்பட்டபோதிலும் பக்தர்கள் கூட்டம் சிறிதும் குறையவில்லை. கோயிலில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மாலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காகவே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஆனால், மண் சரிவு, கனமழை அபாயம் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் இந்த முறை மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்ததன் காரணமாகவே திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதற்காக நேற்று காலையே மகா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 14000 மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.