திருவண்ணாமலை ஆண்ட வல்லாள மகாராஜா அண்ணாமலையாரின் தீவிர பக்தர். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் குழந்தை வரம் கேட்டு அண்ணாமலையாரை வேண்டி நின்றபோது தானே குழந்தையாக இந்த பிறவியில் இருப்பேன் என தெரிவித்ததாக ஐதீகம். வல்லாள மகாராஜா தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.  தைப்பூச தினத்தன்று அண்டை நாட்டின்மீது படையெடுத்துச் செல்லும்போது வள்ளாள மகாராஜா இறந்துவிடுவார்.  ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினம் தீர்த்தவாரிக்கு அண்ணாமலையார் சென்று திரும்பும்போது வல்லாள மகாராஜா போரில் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்படும், அன்றையதினம் மேளதாளங்கள் இல்லாமல் அண்ணாமலையார் கோவிலுக்கு உள்ளே சென்று விடுவார்.  அதனைத் தொடர்ந்து 30-ஆம் நாள் ஆன மாசி மாத மக நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகொண்டபட்டு கிராமத்தில் துரிஞ்சல் ஆற்றில் உள்ள கௌதம நதிக்கரையில் தந்தையாக பாவித்தவல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.


 




மாசி மக நட்சத்திரமான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று  கோவிலில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையார் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு காட்சி அளித்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட பள்ளிகொண்டபட்டு கிராமத்தில் உள்ள கௌதம நதிக்கரையை வந்தடைந்தார். 199 ஆவது ஆண்டாக வல்லாளமகாராஜாவுக்கு கௌதம நதிக்கரையில் திதிகொடுக்கும் நிகழ்வானது நடைபெற்றது. எனவே சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டு தோறும் மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கரையில் அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி  கவுதம நதிக்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி நடைபெறும் இடத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.


 




 


அந்த இடத்தில் ஏராளமான போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீர்த்தவாரிக்கு முன்பு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமியின் சூல ரூபமான அஸ்திரதேவருக்கு கவுதம நதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தீர்த்தவாரி முடிந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கவுதம நதியில் நீராடினர். மேலும் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்களும் கவுதம நதிக்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல ஷத்திரிய வல்லாள மகாராஜா மடாலய சங்க தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான த.வேணுகோபால், துணைத்தலைவர் அ.ராஜமாணிக்கம், செயலாளர் ரா.காளிதாஸ், துணை செயலாளர் நா.லட்சுமணன், பொருளாளர் மா.பன்னீர்செல்வம், சட்ட ஆலோசகர் நா.இளங்கோவன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.