திருப்பதி வெங்கடேஸ்வரர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு 10 நாட்களில் 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், வைகுண்ட ஏகாதசி 2026 தரிசன அட்டவணையை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆன்லைன் இ-டிப் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முதல் மூன்று நாட்களில் வைகுண்ட துவார தரிசனம் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
முதல் 3 நாட்களுக்கு ஆன்லைன் டோக்கன்கள் கட்டாயம்
டிசம்பர் 30, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகள் ஆன்லைன் இ-டிப் மூலம் சர்வ தரிசன டோக்கன்களை வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக ஒதுக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
டோக்கன்களுக்கான புக்கிங் நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை நடைபெறும். டிசம்பர் 2 ஆம் தேதி டிப் செயல்முறை (குலுக்கல்) மூலம் டோக்கன்கள் ஒதுக்கப்படும். பரிந்துரைகள் உட்பட மற்ற அனைத்து வகையான தரிசனங்களும் இந்த நாட்களில் ரத்து செய்யப்படும்.
ஜனவரி 2 முதல் பொது தரிசனம் மீண்டும் தொடங்கும்
ஜனவரி 2 முதல் ஜனவரி 8 வரை, டோக்கன் இல்லாத பக்தர்கள் வழக்கம் போல் சர்வ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். திருமலை தேவஸ்தானம் தினமும் 15,000 சிறப்பு தரிசன (ரூ.300) டிக்கெட்டுகளையும், 1,000 ஸ்ரீவானி அறக்கட்டளை இடைவேளை தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வெளியிடும். நேரில் வருகை தரும் பிரமுகர்கள் மட்டுமே பரிந்துரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பொது பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, 10 நாட்களுக்கு 8 லட்சம் வைகுண்ட தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் வழங்கும். 182 மணிநேர தரிசனத்தில், 164 மணிநேரம் சாதாரண பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமலை உள்ளூர்வாசிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
திருமலைவாசிகளுக்கு, ஜனவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தினமும் 5,000 சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது.